இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அவர் 2011ஆம் ஆண்டு இந்திய அணிக்கு உலகக்கோப்பையைக் கைப்பற்றித் தந்ததை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ஆனால் அந்த வீரரின் வாழ்விலும் மாற்றம் வந்தது.
குறிப்பாக 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின்போது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்று இந்திய அணி வெளியேறியது. அதன்பின் தோனி தனது கேப்டன் பதவியிலிருந்து தாமாக விலகி அதை இளம் வீரர் கோலியிடம் ஒப்படைத்தார்.
தோனி கேப்டன் பதவியை ஒப்படைத்தாலும் அவரை எப்படியாவது அணியிலிருந்து நீக்க வேண்டும் என பலரும் நினைத்தனர். எனினும் தோனியின் இடத்தை பூர்த்தி செய்யும் வகையில் விக்கெட் கீப்பர், ஆகச்சிறந்த பேட்ஸ்மேன் என்ற ஒரு மாற்று வீரர் இன்றளவும் கிடைக்காததே தோனி இந்திய அணியில் இன்றளவும் இடம்பிடித்திருப்பதற்கான காரணமாக அமைந்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பைத் தொடரின்போதும் தோனி ஒரு சில ஆட்டங்களில் சொதப்பியதால் பல முன்னாள் வீரர்களும் தோனி மீது விமர்சனங்களைத் தொடுத்தனர். ஆனால் அவர்களும் கூட நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ரோஹித், கோலி, ராகுல் என மேல்வரிசை வீரர்கள் வரிசையாக நடையைக் கட்டியபோது பின்னால் தோனி இருக்கிறார் என்ற ஒற்றை நம்பிக்கையில்தான் அந்த மேட்சைப் பார்த்திருப்பார்கள்.
அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அப்போட்டியில் களத்தில் இருந்த தோனி, ஜடோஜா ஆகிய இருவரும் இந்திய அணியை வெற்றிக்கு அருகில் எடுத்துச் சென்றனர். அப்போட்டியில் ஜடேஜா போன பின்பும், தோனி முடித்துவிடுவார் என்ற எண்ணம் தோனியை வெறுப்பவர்களுக்கும் கூட இருந்திருக்கும். ஆனால், கப்தில் அடித்த அந்த டைரக்ட்-ஹிட் மட்டுமே, இந்தியா உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியதற்குக் காரணம் என்றே கூறலாம்.
ஏனெனில் தோனி ரன்-அவுட்டாகாமல் இருந்திருந்தால் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். சரி உலகக்கோப்பை முடிஞ்சிடுச்சு; இனி தோனி ஓய்வை அறிவிப்பார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், தோனி அது குறித்து மவுனம் காத்து வருகிறார். அந்த மவுனத்திற்கான காரணம் ஒன்று மட்டுமே, அணியின் வெற்றியைத் தீர்மானிக்கும் ஒரு ஃபினிஷருக்கான தேவைதான் அது.
அதுபோன்ற ஒரு வீரர் தேவை என்பதை உணர்ந்திருக்கும் தோனியை தூக்கி எறியும் வகையில் பிசிசிஐ வேலை செய்து வருவதாக கடந்த இரண்டு தினங்களாக தகவல்கள் வெளிவரத் தொடங்கி இருக்கின்றன. தோனி அவராக வெளியேற வேண்டும் போன்ற செய்திகள் வந்த நிலையில், தற்போது புதிய செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
அது என்னவென்றால் தோனி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார் என்பதே அந்தத் தகவல். மேலும், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தொடர்களில் தோனி இந்திய அணியில் இடம்பிடிப்பார்.
ஆனால் விக்கெட் கீப்பராக இருக்க மாட்டார். அந்த விக்கெட் கீப்பர் பொறுப்பு இளம் வீரர் ரிஷப் பண்ட்டுக்கு வழங்கப்படும். தோனி ரிஷப் பண்ட்டிற்கு அறிவுரை வழங்குபவராக இந்திய அணியில் செயல்படுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளதால் அதற்கு ரிஷப் பண்ட்டை தயார் செய்யும் நோக்கிலே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும் தோனிக்கு ஓய்வு குறித்த எந்த முடிவும் இல்லை என்று மற்றொரு தரப்பு கூறிவருகிறது. அவர் இன்னும் சில காலம் அணியில் இருக்க வேண்டும் என்றும் சிலர் கூறிவருகின்றனர்.