புரோ கபடி லீக் தொடரின் ஏழாவது சீசன் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்தத் தொடரின் முதல் 11 லீக் போட்டிகள் ஹைதராபாத்தில் முடிந்ததையடுத்து, 12ஆவது லீக் போட்டி மும்பையில் கடந்த 27ஆம் தேதி தொடங்கியது.
இதில், யு மும்பா - புனேரி பல்டான் அணிகள் மோதின. இப்போட்டியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி போட்டியை தொடங்கிவைத்தார்.
போட்டி தொடங்கிவைப்பதற்கு முன்னதாக பேசிய கோலி, தமிழ் தலைவாஸ் அணியில் இடம்பிடித்துள்ள ராகுல் சவுத்திரிதான் எனக்கு பிடித்த வீரர் எனக் கூறினார். பின்னர், இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து கபடி அணிக்கு அவர் வீரர்களை தேர்வு செய்தார்.
கபடி விளையாட மன உறுதி, உடற்தகுதி தேவை என குறிப்பிட்ட கோலி, எனது அணியில் தோனி, ரிஷப் பந்த், உமேஷ் யாதவ், ஜடேஜா, பும்ரா ஆகியோரை தான் தேர்வு செய்வேன் என்றும், தன்னை சேர்த்துக்கொள்ள மாட்டேன் எனவும் தெரிவித்தார்.
கிரிக்கெட்டில் பும்ரா யார்க்கர் பந்துகளை துல்லியமாக வீசுவதைப் போல், கபடியிலும் அவர் தனது காலை வைத்தே எதிரணியின் கால்களை பதம் பார்த்து புள்ளிகள் எடுப்பார் எனக் கூறிய அவர், தனது அணியில் தோனிதான் எப்போதும் கேப்டன் எனக் கூறினார்.
கோலியின் இந்தப் பேச்சு அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற போட்டியில் யு மும்பா அணி 33-23 என்ற புள்ளிகள் கணக்கில் புனேரி பல்டான்ஸ் அணியை வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து, நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் ஜெய்பூர் பிங் பேந்தர்ஸ் 27-25 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியிடம் த்ரில் வெற்றிபெற்றது.