இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்கமுடியாத வீரராக இருக்கும் தோனி, சிறுவயதிலிருந்து கால்பந்து விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் கிரிக்கெட்டர் ஆவதற்கு முன்பு, கால்பந்து விளையாட்டில் கோல்கீப்பராகத்தான் இருந்தார். தற்போது அவர் மீண்டும் கால்பந்து விளையாட்டில் களமிறங்கியுள்ளார்.
மும்பையில், நிதி திரட்டும் வகையில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் அவர், இந்திய டென்னிஸ் நட்சத்திர வீரர் லியாண்டர் பயஸுடன் சேர்ந்து கால்பந்து போட்டியில் விளையாடினார்.
இந்தப் புகைப்படத்தை தோனி நிர்வகிக்கும் ரித்தி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டது. தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அவர் அணிந்திருந்த கால்பந்து பயிற்சி ஜெர்சியில் மனிதநேயத்திற்காக விளையாடுவோம் என எழுதப்பட்டிருந்தது. கால்பந்து விளையாட்டிலும் ஆர்வம் காட்டும் தோனி, ஐ.எஸ்.எல். கால்பந்துத் தொடரில் சென்னையின் எஃப்.சி. அணியின் இணை உரிமையாளராகவும் இருக்கிறார்.
உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு, அவர் தற்போது கிரிக்கெட்டிலிருந்து சற்று ஒதுங்கியுள்ளார். குறிப்பாக, இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் இடம்பெறாமல் தற்காலிக ஓய்வில் இருந்தார். மேலும், வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ரீ-என்ட்ரி தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மீண்டும் தனது ஓய்வுகாலத்தை நீட்டித்துள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கிரிக்கெட்டில் இதை எல்லோரும் கண்டிப்பா பார்த்திருப்போம்... தோனியின் ஃப்ளாஷ்பேக்!