இந்திய பாதுகாப்புப்படையில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பொறுப்பிலுள்ள கிரிக்கெட் வீரர் தோனி, கடந்த ஒரு மாதமாக இந்திய பாதுகாப்புப் படையின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து ஜம்மு - காஷ்மீர் பகுதியில் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்நிலையில், லே மாவட்டத்தில் சிறுவர்களுடன் இணைந்து தோனி கிரிக்கெட் விளையாடிய புகைப்படம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது.
அதில் ”வேறு துறை, வேறு விளையாட்டுயுக்தி” என பதிவிட்டு அவர் பந்தை அடிப்பது போல் உள்ளது.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அப்பகுதியிலுள்ள கூடைப்பந்து மைதானத்தை கிரிக்கெட் மைதானமாக மாற்றி விளையாடிய புகைப்படம், தோனி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து மூத்த ராணுவ அலுவலர் ஒருவர் கூறுகையில் “தோனி இந்திய ராணுவத்தின் தூதராகவுள்ளார். அவர் தனது பிரிவின் உறுப்பினர்களை ஊக்குவிப்பது மற்றும் வீரர்களுடன் கால்பந்து, கைப்பந்து விளையாடுவது என அனைத்து செயல்களையும் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி அவர் படையினருடன் போர் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்” என்று தெரிவித்திருந்தார்.