கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ந்து ஐபிஎல் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று, 2016இல் சாம்பியனாகவும், 2018இல் இரண்டாம் இடத்தையும் பிடித்து அசைக்க முடியாத அணியாக வலம் வருகிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
டேவிட் வார்னர் கேப்டனாக பொறுப்பேற்ற பின் எழுச்சியடைந்த ஹைதராபாத் அணி, பேட்டிங், பவுலிங், வலுவான ஆல்-ரவுண்டர் வரிசை, மிரட்டும் பந்துவீச்சு என உலகத்தரத்தில் அணியின் கட்டமைப்பு இருந்தாலும், ஏதோ ஒரு வகையில் அணி முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறது.
வெளிநாட்டு வீரர்களின் அணிவகுப்பு: கேப்டன் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ், ஜேசன் ராய், கேன் வில்லியம்சன், ஜேசான் ஹோல்டர், ரஷித் கான், முகமது நபி, முஜிபுர் ரகுமான் என வெளிநாட்டு வீரர்களை உள்ளடக்கிய ஹைதராபாத் அணி, இவர்களில் யாரை எந்தப் போட்டியில் தேர்ந்தெடுப்பது என்பதில் தான் சறுக்குகிறது.
ஒரு போட்டியில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில், இந்திய ஆடுகளங்கள் சுழலுக்கு ஒத்துழைக்கும் என்பதால் ரஷித் கான் அணிக்கு அவசியமாகிறார். கேப்டன் வார்னரின் தேவை அணிக்கு முக்கியமெனும் பட்சத்தில் மீதமுள்ள இரண்டு இடங்களில் மற்றவர்களை நிரப்புவது என்பது சற்று கடினம் என்றே தோன்றுகிறது.
நடந்து முடிந்த இங்கிலாந்து இந்தியா டி20 தொடரில் இங்கிலாந்து வீரர்கள் ராய் – பேர்ஸ்டோவின் அதிரடி தொடக்கமானது இந்த ஐபிஎல் தொடரிலும் பயன்படலாம். ராய் அல்லது பேர்ஸ்டோவ் இருவரில் ஒருவரை மட்டுமே தேர்ந்தெடுத்தாலும் அடுத்து கேன் வில்லியம்சனை இறக்குவதா இல்லை ஆல்-ரவுண்டரான ஹோல்டரை இறக்குவதா என்ற சிக்கலும் எழுகிறது.
பந்துவீச்சில் புதிய பந்துகளை கையாலும் பவுலர்களான புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா இணையரும், யார்க்கர் மன்னன் நடராஜன் ஆகியோரும் ரன்களை கட்டுப்படுத்துவதில் கில்லாடிகள்.
ஆனால், சுழலில் ரஷித் கானை மட்டுமே ஹைதராபாத் அணி நம்பியுள்ளது. அனுபவம் வாய்ந்த இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாதது அணிக்குப் பெரும் இழப்பு தான். சென்னை, டெல்லி போன்ற ஆடுகளத்தில் கூடுதல் சுழற்பந்து வீச்சாளர்கள் தேவைப்படும். அப்போது முஜிபுர் ரகுமான் அல்லது நபியை அவர்கள் பயன்படுத்தலாம்.