பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா. இவர் அந்நாட்டு அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 261 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில் 15 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருக்கிறார். டேனிஷ் இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் எசெக்ஸ் அணியில் விளையாடினார். அச்சமயத்தில் டேனிஷ், ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர், தங்கள் அணியிலிருந்த சில வீரர்கள் டேனிஷ் கனேரியா ஒரு இந்து என்பதால் அவருடன் பேச மறுத்ததாக தெரிவித்திருந்தார்.
பின்னர் இச்சம்பவம் குறித்து மனம் திறந்த டேனிஷ், உலகத்திற்கு உண்மையை வெளிக்கொண்டுவந்த அக்தருக்கு நன்றி தெரிவித்திருந்தார். மேலும், தனக்கு உறுதுணையாக இருந்த வீரர்கள், கிரிக்கெட் நிர்வாகத்தினர், ஊடகங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போது தனது வாழ்க்கை நன்றாக இல்லை. முன்னதாக பாகிஸ்தானில் உள்ள பலரிடம் எனது பிரச்னைகளை தீர்க்க நாடினேன். ஆனால் எனக்கு இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. பல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளது. நானும் பாகிஸ்தான் அணிக்காக பலவற்றை அளித்திருக்கிறேன். இதனால் எனக்கு மக்கள் உதவ முன் வருவார்கள் என நம்புகிறேன் என்றார்.
மேலும், தனக்கு பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் நிர்வாகத்தினர் என அனைவரும் உதவ முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டேனிஷ் கனேரியா, தனது உறவினரும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பருமான அனில் தல்பாத்திற்கு அடுத்தபடியாக அந்த அணியில் விளையாடிய இரண்டாவது இந்து என்பது குறிப்பிடத்தக்கது.