கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் தற்போது, செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் மீண்டும் தங்களது பயிற்சிக்கு திரும்பி வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா 3 மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் தனது பயிற்சிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், கடந்த 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியின் போது, அந்த அணியின் ஃபால்க்னர் தனது ஒரே ஓவரில் 30 ரன்களை விளாசியதும் தான் ஒரு குழந்தையைப்போல் அழுததாக குறிப்பிட்டார்.
இதுகுறித்து பேசிய இஷாந்த், 'கடந்த 2013ஆம் ஆண்டு மொஹாலியில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஜேம்ஸ் ஃபால்க்னர், எனது ஒரே ஓவரில் 30 ரன்களை அடித்து ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தார். அப்போது தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. அப்போது நான் எனக்கும், எனது நாட்டிற்கும் துரோகம் இழைத்ததாக உணர்ந்தேன். இரண்டு மூன்று வாரங்கள் நான் யாரிடமும் பேசவில்லை.
நான் ஒரு கடினமானவன் என்றாலும், அந்த போட்டிக்கு பிறகு அழுதேன். மேலும் நான் என் காதலியை தொடர்பு கொண்டு குழந்தையைப் போல தொலைபேசியில் அழுதேன். அதேசமயம் நான் சாப்பிடுவதை நிறுத்தினேன், என்னால் தூங்கவோ, அல்லது வேறு எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தவோ முடியவில்லை.
ஆனால் அந்த சம்பவம் எனக்கு மிகப்பெரும் பாடத்தையும் கற்றுத்தந்தது. சில சமயங்களில் உங்கள் ஆர்வத்தை புரிந்து கொள்ள இது போன்ற ஒரு சில சம்பவங்கள் உங்களுக்கு பயனளிக்கும். அதுபோல தான் அந்தப் போட்டிக்கு பிறகு, எனது செயல்களுக்கு நான் பொறுப்பேற்கத் தொடங்கினேன். உங்கள் செயல்களுக்கு நீங்கள் பொறுப்பேற்கத் தொடங்கும் போது, அணிக்காக மட்டுமே நீங்கள் ஒவ்வொரு போட்டியையும் விளையாடுவீர்கள்.
பிறகு அப்போதைய கேப்டன் தோனி என்னை ஆதரித்தார். மேலும் அவரது கேப்டன்ஷியில் நான் 60 டெஸ்ட் போட்டிகளுக்கு மேலாகவும் விளையாடினேன். அதன் பின் தற்போது வரை நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சிறந்த பந்துவீச்சாளராகவும் செயல்பட்டு வருகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.