கிரிக்கெட் பந்துகளை பளபளக்கச் செய்வதற்கும், ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்கும் பந்துகள் மீது வீரர்கள் வியர்வை, எச்சில் தடவுவது வழக்கம். ஆனால், கரோனாவுக்கு பிறகான உலகத்தில் பந்து மீது எச்சில் தடவுவதற்கு தடை விதிக்க வேண்டுமென ஐசிசி பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில், கரோனா வைரஸ் கட்டுக்குள் வந்த பிறகு கிரிக்கெட் பந்துகளில் கிருமிநாசினிகளை பயன்படுத்த ஐசிசியிடம் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி கோரியுள்ளது. இது தொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் விளையாட்டு அறிவியல் மற்றும் மருத்துவ மேலாளர் அலெக்ஸ் கவுண்டூரிஸ் கூறுகையில், "தற்போதைய நிலைமை சரியாகி, வீரர்கள் பயிற்சிக்கு திரும்பும்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் வரையரைக்கப்பட்டுள்ளது.
போட்டியின் போது கிரிக்கெட் பந்துகளில் கிருமிநாசினிகளை பயன்படுத்துவதன் மூலம் வீரர்களின் சுகாதாரத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க விரைவில் சோதனை நடைபெறவுள்ளது. பந்துகளில் கிருமிநாசினி பயன்படுத்துவது என்பது கருத்தளவிலேயே உள்ளது. இருப்பினும் ஐசிசியிடம் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒப்புதல் பெறப்பட்டபின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்க முடியும். ஆனால் இதை நடைமுறைப்படுத்துவதில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன" என்றார்.
இதையும் படிங்க: எச்சிலை தடவாமல் பந்தை ஸ்விங் செய்ய என்ன பண்ணலாம்? வார்னே கூறும் சூப்பர் ஐடியா