உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருவதால் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் மட்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62ஆக உயர்ந்துள்ளது.
இதன் விளைவாக, டெல்லியில் நடைபெறவிருந்த உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், மார்ச் 29ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரை ரத்துசெய்யக்கோரி மகாராஷ்டிரா சுகாதாரத் துறை, கர்நாடக சுகாதாரத் துறை பிசிசிஐயிடம் கேட்டுக்கொண்டது. ஆனால், ஐபிஎல் தொடர் நிச்சயம் திட்டமிட்டப்படி நடைபெறும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார். மேலும், ஐபிஎல் தொடர் தள்ளிவைப்பது குறித்து இன்னும் முடிவுசெய்யவில்லை என்றும் பிசிசிஐ அலுவர் ஒருவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஐபிஎல் தொடருக்குத் தடைவிதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு, நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
இதையும் படிங்க: கர்நாடகாவில் கொரோனா பாதிப்பில் சந்தேகிக்கப்பட்டவர் உயிரிழப்பு!