கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக இங்கிலாந்தில் ஜூன் 30ஆம் தேதி வரை அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இங்கிலாந்து வீரர்கள் தங்களது தனிப்பட்ட திறன் அடிப்படையிலான பயிற்சிகளை மேற்கொள்வதற்காக, சில கடுமையான நெறிமுறைகளுடன் கூடிய அனுமதியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வழங்கியது.
குறிப்பாக, கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு பந்துவீச்சாளரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பந்துகளை வைத்து மட்டுமே பயிற்சி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி நேற்று தொடங்கவிருந்த இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் பயிற்சி முகாம் பாதுகாப்பு நெறிமுறை சிக்கல்களால் தாமதமானது.
அணியின் பிசியோதெரபிஸ்ட்டுக்கு வழங்கவிருந்த பாதுகாப்பு உபரணங்கள் தட்டுப்பாடாக இருந்தது. அதேசமயம் பந்துவீச்சாளர்களுக்குப் பந்துகள் வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது. இவை இரண்டும்தான் பந்துவீச்சாளர்களின் பயிற்சி முகாம் தொடங்குவதில் தாமதமானதற்கு முக்கியக் காரணமென இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த வார இறுதியில் வீரர்களின் தனிப்பட்ட பயிற்சி முகாம் தொடங்கும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. முன்னதாக, ஜூலை, ஆகஸ்ட் மாதம் திட்டமிட்டிருந்தபடி இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர்கள் பார்வையாளர்களின்றி நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
ஒருவேளை இந்தத் தொடர் நடைபெற்றால் மார்ச் மாதத்திற்குப் பிறகு நடைபெறும் முதல் டெஸ்ட் தொடராக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இங்கிலாந்து தொடருக்கு எங்களை யாரையும் கட்டாயப்படுத்தவில்லை’ - ஜேசன் ஹோல்டர்!