இந்த ஆண்டு அக்டோபர் - நவம்பர் மாதத்தில் டி20 உலகக்கோப்பைத் தொடர் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதையடுத்து, அனைத்து வகையிலான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
மார்ச் மாதம் முதல் கிரிக்கெட் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இதுவரை எந்தவொரு கிரிக்கெட் போட்டியும் நடக்கவில்லை. இதனிடையே இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே பர்வையாளர்களின்றி கிரிக்கெட் போட்டிகள் நடக்கவுள்ளது.
இதனால் டி20 உலகக்கோப்பத் தொடர் திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்த விவகாரத்தில் கரோனா வைரசின் தாக்கத்தை கண்காணித்து முடிவு எடுக்கப்படும் என ஐசிசி அறிவித்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன், பிரபலமான கிரிக்கெட் மைதானங்களைத் தவிர்த்து 40 ஆயிரம் இருக்கைகளைக் கொண்டுள்ள மைதானங்களில் 10 ஆயிரம் ரசிகர்கள் வரை அனுமதிக்கலாம் என அறிவித்தார். இந்த எண்ணிக்கை அடுத்தடுத்த மாதங்களில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் சூழல் ஆஸ்திரேலியாவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டால், விரைவில் டி20 உலகக்கோப்பைத் தொடர் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துள்ளன.
மேலும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.