கோவிட்-19 தொற்றுக் காரணமாக இந்தியாவில் இதுவரை 500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக நேற்று (மார்ச் 24) நள்ளிரவு 12 மணி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், சிகிச்சை அளிப்பதற்கு ரூ.25 லட்சம் வழங்குவதாக பெங்கால் கிரிக்கெட் வாரியம்(சிஏபி) தெரிவித்துள்ளது.
இது குறித்து சிஏபி-யின் தலைவர் அவிசேக் டால்மியா கூறுகையில், கோவிட்-19 தொற்றுக் காரணமாக தற்போது நிலவிவரும் சூழல் மிகவும் கொடுமையானது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிக்க பலரும் முன்வந்துள்ளனர். அந்த வகையில் பெங்கால் கிரிக்கெட் வாரியமும் ரூ.25 லட்சத்தை மேற்கு வங்க அரசுக்கு அவசரகால நிதியாக வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், கிரிக்கெட் என்பது நம் அனைவரின் ஒற்றுமையைக் குறிக்கும். அந்தவகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவ முன்வர வேண்டும். இது நமது கடமைகளில் ஒன்றாக மாறவேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:துணி துவைத்து, கழிவறையை சுத்தம் செய்யும் தவான்...!