டெஸ்ட் போட்டிகளில் ஒரு தனி நபரின் அதிகபட்ச ஸ்கோராக இதுநாள் வரை இருப்பது வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான பிரையன் லாரா அடித்த 400 ரன்களே ஆகும். இவர் இச்சாதனையை கடந்த 2004ஆம் ஆண்டு நிகழ்த்தினார்.
அதன் பின் தற்போது வரை யாராலும் அந்த சாதனையை நிகழ்த்த முடியவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 335 ரன்களை எடுத்தார். அப்போது அவர் லாராவின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்தது. இதனால் அவரால் அச்சாதனையை நிகழ்த்த முடியவில்லை.
இந்நிலையில் இது குறித்து பிரையன் லாரா கூறுகையில், ' வார்னர் அந்தப் போட்டியில் எனது சாதனையை முறியடிப்பார் என நானும் எதிர்பார்த்து கொண்டிருந்தேன். ஆனால் அதற்கு முன்னதாகவே ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்தது வருத்தமளிக்கின்றது. இருப்பினும் எனது டெஸ்ட் சாதனையை இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மாவோ அல்லது பிரித்வி ஷாவோ தான் முறியடிப்பார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் 19 வயதே ஆன பிரித்வி ஷா, இதுவரை இந்திய அணிக்காக 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கும் நிலையில், லாரா அவரின் பெயரைச் சொல்லி கூறியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
இதையும் படிங்க:ரஞ்சி கோப்பை: ஒற்றை சுழலில் தோல்வியை தழுவிய தமிழ்நாடு!