நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம், கடந்த 2016ஆம் ஆண்டு அனைத்துவிதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். அதன்பின் இவர் பல்வேறு நாடுகளிலும் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடர்களில் மட்டும் ஆடிவந்தார். இவர், தற்போது குளோபல் டி20 கனடா தொடரில் டொராண்டோ அணிக்காக களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில், நேற்று மெக்கல்லம் தனது ட்விட்டர் பக்கத்தில், தான் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிக்கை ஒன்றை பதிவிட்டார். அதில் அவர் தனது 20 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை எண்ணி பெருமை கொள்கிறேன். நான் முதலில் கிரிக்கெட் ஆட வரும்போது என்னால் இத்தனை சாதனைகளை நிகழ்த்த முடியும் என்று நான் நினைத்ததில்லை.
சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை அளிக்க நான் சிரமப்படுகிறேன். அனைத்து விதமான நல்ல விஷயங்களும் ஒருநாள் முடிவுக்கு வரவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதிரடி ஆட்டக்காரரான பிரண்டன் மெக்கல்லம், நியூசிலாந்து அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். அவர் இதுவரை 260 ஒருநாள் போட்டிகளில் 6 ஆயிரத்து 83 ரன்களும், 101 டெஸ்ட் போட்டிகளில் 6 ஆயிரத்து 453 ரன்களும் எடுத்திருக்கிறார். இதுதவிர டி20 ஸ்பெஷலிஸ்டான மெக்கல்லம் 71 சர்வதேச போட்டிகளில் 2 ஆயிரத்து 140 ரன்களை குவித்துள்ளர். இவர் மொத்தமாக டி20 போட்டிகளில் 9 ஆயிரத்து 922 ரன்கள் குவித்து டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி மன்னன் கெயிலுக்கு அடுத்துபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்தியாவில் நடத்தப்படும் டி20 தொடரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடியுள்ளார்.