கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் விளையாட்டு வீரர்கள் தங்களை சுயமாக தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தும், காணொலி நேர்காணல் மூலம் பேட்டியளித்தும் வருகின்றனர்.
அந்தவகையில், பிரபல தனியார் விளையாட்டு நாளிதழின் இன்ஸ்டாகிராம் நேரலையில் பங்கேற்ற நியூசிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் கோரி ஆண்டர்சன், தோனி போன்ற வீரர்களுக்கு பந்துவீசுவதன் மூலமாகவே, நீங்கள் இந்த விளையாட்டில் ஒரு சிறந்த வீரராக வலம் வர முடியுமென கூறியுள்ளார்.
இதுகுறித்து நேர்காணலில் பேசிய ஆண்டர்சன், “இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் விளையாட்டின் மிகச்சிறந்த வீரர். அவர் மிகச்சிறந்த ஃபினிஷரும்கூட. அவருக்கு பந்து வீசுவது என்பது மிகவும் சவாலான ஒரு விஷயம். அவருக்கு பந்துவீசுவது குறித்த சந்தேகங்களை நான் விராட் கோலி, ஏபிடி வில்லியர்ஸிடமிருந்து நீண்ட நாட்களாக கற்றுக்கொண்டு வருகிறேன். அவர்கள் ஒவ்வொரு முறையும் பந்துவீசும்போது நான் என்ன செய்ய வேண்டுமென எனக்கு அறிவுரை வழங்குவார்கள்.
தோனிக்கு பந்துவீசும்போது அவர்கள் என்னிடம் கூறும் விஷயங்கள், ‘நீங்கள் இங்கே பந்துவீசினால் சிக்சர் அடிப்பார், வேறு இடத்தில் வீசினால் மற்றொரு சிக்சரை அடிப்பார்’ என்பது போன்றுதான் இருக்கும். அவர் அப்படி செய்வதற்கு நீங்கள் முதன்மையானவர் அல்ல, உலகில் அவருக்கு பந்துவீசிய அனைவருக்கும் ஏதேனும் ஒரு போட்டியில் தோனி இதனை செய்துள்ளார் என கூறுவார்கள்.
பந்துவீச்சாளர்களுக்கு நான் கூறுவது ஒன்றுதான். கிரிக்கெட்டில் நீங்கள் சிறந்த பந்துவீச்சாளராக விளங்க வேண்டுமெனில், தோனியைப் போன்ற ஒரு வீரருக்கு பந்து வீசுவது எப்படி என கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் அவரைப்போன்ற வீரருக்கு பந்துவீசும்போதுதான் உங்களது தன்னம்பிக்கை உயரும். சில சமயங்களில் அது உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். இருந்தாலும் அதுதான் பின்னாட்களில் உங்களை ஒரு சிறந்த வீரராகவும் மாற்ற உதவும்” என்றார்.
இதையும் படிங்க: தென் ஆப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் அணியை நிச்சயம் டி காக் வழிநடத்த மாட்டார் - கிரேம் ஸ்மித்!