காலம் காலமாக கிரிக்கெட் போட்டிகளில், பந்தை உபயோகிக்க ஏதுவாக அதன் மீது உமிழ்நீர் பயன்படுத்துவது வழக்கம். அப்படி செய்வதால் பந்து நன்கு ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். இந்த நிலையில், கரோனா வைரஸ் காரணமாக பந்துகளில் உமிழ்நீர் பயன்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தின் பிரபல கிரிக்கெட் பந்து தயாரிப்பு நிறுவனமான டியூக்ஸ் உரிமையாளர் திலீப் ஜஜோடியா தனியார் விளையாட்டு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், கிரிக்கெட் பந்துகளை பளபளப்பாக்குவதற்கு உமிழ்நீரை பயன்படுத்துவது மட்டுமே ஒரே தீர்வு கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘இங்கிலாந்தை பொறுத்தவரை பந்து ஸ்விங்காவது பெரும் பிரச்னையாக எனக்கு தெரியவில்லை. காரணம் இங்கிலாந்தின் மைதானங்கள் அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் பந்து ஸ்விங் ஆவதற்கு உமிழ் நீர் மட்டுமே தீர்வு கிடையாது.
அதேசமயம் பேட்டிற்கும் பந்திற்குமான இடைவெளி குறையுமானால், அது ஆட்டத்தில் சலிப்பை உண்டாக்கும். இதன் காரணமாகவே பந்துவீச்சாளர்கள் பந்து ஸ்விங் ஆக்குகின்றனர். ஆனால் அதற்கு பந்து பளபளப்பாகவே அல்லது கரடுமுரடாகவே இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஏனெனில் அது பந்தினுடைய இயல்பு தன்மையாகும்.
நாங்கள் தயாரிக்கும் பந்துகளானது மற்ற பந்துகளை விட சிறப்பாக செயல்படக்கூடியது. காரணம் எங்களது பந்துகள் கைகளால் தைக்கப்படுவதால், அதன் தையல் பகுதி ஒரு சுக்கானைப் போல செயல்பட்டு பந்துகளை நம்மால் திருப்புவதற்கு உதவி செய்கிறது. மேலும் இந்த வகையான பந்துகள் நெடுநேரம் ஆட்டத்தில் தாக்கு பிடிப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐசிசி தற்போது வியர்வையை பயன்படுத்த தடை விதிக்கவில்லை. அதனால் நீங்கள் பந்துகளில் வியர்வையை பயன்படுத்தி சிறிது பளபளப்பாக்க முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.
டியூக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பந்துகள் இங்கிலாந்தின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான கவுண்டி கிரிக்கெட்டில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தங்களது நாடுகளில் நடைபெறும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கு இந்த நிறுவனத்தின் பந்துகளை மட்டுமே உபயோகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:டி20 உலகக்கோப்பை ஒத்திவைக்கப்பட்டால் தோனியின் எதிர்காலம் முடிவுக்கு வருமா?