இதுதொடர்பாக ஐபிஎல் நிர்வாக கவுன்சில் தலைவர் பிரிஜேஷ் படேல் பேசுகையில், “ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்திக்கொள்வதற்கான ஒப்புதலை வழங்குமாறு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அரசின் முடிவின் அடிப்படையில் ஐபிஎல் நிர்வாக கவுன்சில், ஐபிஎல் போட்டிகளுக்கான தேதிகளை முடிவுசெய்யும். அடுத்த வாரத்துக்குள் இதற்கான விடை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.
முன்னதாக, வரும் அக்டோபர் 18 முதல் நவம்பர் 16ஆம் தேதி வரை நடைபெறவிருந்த உலகக்கோப்பை டி20 தொடரை 2022ஆம் ஒத்திவைப்பதாக ஐசிசி திங்கட்கிழமையன்று அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பிசிசிஐ உடனடியாக கோடிக்கணக்கில் பணம் கொழிக்கும் ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கான திட்டமிடலில் களமிறங்கியது.
இதையடுத்து ஐபிஎல் தொடருக்கான தேதி பற்றி எந்த அறிவிப்பும் வெளிவராத நிலையில், செப்டம்பர் 26 முதல் நவம்பர் 7 அல்லது நவம்பர் 14ஆம் தேதி வரை போட்டிகள் நடத்த உத்தேசித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாகப் போட்டி ஒளிபரப்பாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது.
வரும் டிசம்பர் 3ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதையடுத்து மேற்கூறிய தேதியில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று முடிந்தால்தான், இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் கட்டாய தனிமைப்படுத்தலில் இருப்பதற்குப் போதுமான கால அவகாசம் கிடைக்க வாய்ப்புள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, 2014ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் ஒரு பகுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது கரோனா அச்சம் காரணமாக ஐபிஎல் தொடர் துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: உலகக்கோப்பையை யார் நடத்தப் போகிறார்கள்? - ஐசிசி அறிவிப்பால் எழுந்த புதிய குழப்பம்