2023ஆம் ஆண்டு நடக்கவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் டெஸ்ட் போட்டிகளின் நாள்களை நான்காக குறைப்பதற்கு ஐசிசி கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த யோசனைக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஆகியவை ஆதரவளித்தன.
இதுகுறித்து கடந்த 12ஆம் தேதி அனைத்து முக்கிய கிரிக்கெட் வாரியங்களுடனும் பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அந்தக் கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதில், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான நாள்களை நான்காகக் குறைப்பதற்கு பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் குறித்து ஐசிசி ஆலோசனைக் கூட்டத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆகியவை நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளுக்கு ஆதரவு அளித்த நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, முன்னாள் வீரர் சச்சின் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளின் நாள்களைக் குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, பாரம்பரியமாக விளையாடப்பட்டு வரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றம் கொண்டுவரக்கூடாது என வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நான்கு நாள் டெஸ்ட் கிரிக்கெட்: மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ள ஐசிசி!