இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசின் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளித்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்தியாவிலேயே நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், ஐபிஎல் தொடரை வெளிநாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து பிசிசிஐ அலுவலர் பேசுகையில், ''ஐபிஎல் தொடர் நடத்துவது பற்றிய இறுதி முடிவு எடுக்கும் நிலையில் உள்ளவர்கள் 3க்கு 2 என பிரிந்துள்ளனர். இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடத்தப்பட வேண்டும் என அனைவரும் சிந்தித்து வருகிறோம். இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டால் மக்களுக்கும் அது நல்ல முடிவாக இருக்கும். ஏனென்றால் கரோனா வைரஸ் பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வந்த பின்னரே ஐபிஎல் போட்டிகள் நடத்த மத்திய அரசி அனுமதியளிக்கும்.
ஆனால் இந்தத் தொடரை வெளிநாடுகளில் நடத்தினால் வீரர்கள் வெளிநாடுகளுக்கு பயணிப்பதில் இருந்து, புதிதாக பல விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியதாக இருக்கும். ஐபிஎல் தொடரை எப்படியாவது நடத்த வேண்டும் என்ற ஆலோசனைகள் நடத்திவருகிறோம். இன்னும் எங்கு நடத்தப்படும் என்ற இறுதி முடிவு எடுக்கப்படவில்லை'' என தெரிவித்தார்.