இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் ரீப்ளேஸ்மெண்ட்டாக கருத்தப்படும் ரிஷப் பந்த், சமீப காலங்களாக விக்கெட் கீப்பிங் + பேட்டிங் இரண்டிலும் பெரிய அளவில் ஜொலிக்காமல் இருந்துவந்தார். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் காயம் காரணமாக ரிஷப் பந்த் விலகியதால் அவருக்கு பதில் விக்கெட் கீப்பிங் பணியை கே.எல். ராகுல் மேற்கொண்டார்.
அந்தத் தொடரில் பேட்டிங், விக்கெட் கீப்பிங் இவை இரண்டிலும் கே.எல். ராகுல் சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக, இரண்டாவது ஒருநாள் போட்டியில் கே.எல். ராகுல் ஐந்தாவது வரிசையில் களமிறங்கிய அவர் 55 பந்துகளில் 80 ரன்கள் அடித்தும் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதையடுத்து, நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முதல் டி20 போட்டியிலும் ரிஷப் பந்திற்கு பதிலாக கே.எல். ராகுலையே இந்திய அணி விக்கெட் கீப்பராக பயன்படுத்தியது. இப்போட்டியிலும் கே.எல். ராகுல் விக்கெட் கீப்பிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
"2003ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின்போது ராகுல் டிராவிட் விக்கெட் கீப்பராக செயல்பட்டதால் இந்திய அணிக்கு ஒரு பேட்ஸ்மேனை சேர்த்துக்கொள்ள முடிந்தது. அதேபோல்தான் கே.எல். ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டதால் ஒரு பேட்ஸ்மேன் சேர்த்துக்கொள்ளப்படுகிறார். இது இந்திய அணிக்கு சாதகத்தை ஏற்படுத்தியுள்ளது" என கோலி தெரிவித்திருந்தார்.
இதனால், 2003இல் கங்குலியின் ஃபார்முலாவை தற்போது கோலி பயன்படுத்துகிறார் என பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். இப்படியான சூழலில், ரிஷப் பந்திற்கு பதில் கே.எல். ராகுலை விக்கெட் கீப்பராக பயன்படுத்துவது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில்,
"கே.எல். ராகுலை விக்கெட் கீப்பராக பயன்படுத்தியது கோலி மற்றும் அணி நிர்வாகத்தின் முடிவாகும். டெஸ்ட் போட்டிகளில் கே.எல். ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினாலும் பின் நாட்களில் ஃபார்ம் அவுட்டுக்கு சென்றார். ஆனால் ஒருநாள், டி20 போட்டிகளில் தற்போது அவர் சிறப்பாக விளையாடிவருகிறார். அவர் இன்னும் சிறப்பான செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட் அணியின் 'புதிய பெருஞ்சுவர்' புஜாரா!