இந்தியாவின் டி20 திருவிழா என்றழைக்கப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், இந்தாண்டு ஏப்ரல் 9ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இத்தொடருக்கான மைதானம், அட்டவணை ஆகியவற்றையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
அதன்படி, ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இந்நிலையில், அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இரு ஐபிஎல் அணிகள் சேர்க்கப்படும் என ஏற்கனவே பிசிசிஐ அறிவித்திருந்த நிலையில், தற்போது புதிய அணிகளுக்கான ஏலம் இந்தண்டு மே மாதம் நடைபெறும் என்ற அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ அலுவலர் ஒருவர் கூறுகையில், ”10 அணிகள் கொண்ட ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. மேலும், புதிய அணிகளின் உரிமையாளர்களுக்கான ஏலம் இந்தாண்டு மே மாதத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என்பதையும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ”இங்கிலாந்துடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. இதில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல் ஆகியோர் இடம்பெற மாட்டார்கள்.
ஏனெனில், முக்கிய வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா என யாரும் விடுப்பு கேட்காததால் அணியில் மாற்றம் இருக்காது. பிரித்வி ஷா, தேவ்தூத் படிக்கல் ஆகியோர் நன்றாக விளையாடி வருகிறார்கள். இருப்பினும் அவர்கள் தங்களுக்கான நேரம் வருவதற்காக காத்திருக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்
இதையும் படிங்க:மீண்டுமொரு மைல் கல்லை எட்டிய மிதாலி ராஜ்!