ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரனான பிக் பேஷ் லீக் தொடரின் பத்தாவது சீசன் இன்று கோலாகலமாகத் தொடங்கியது. இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் ஹாண்ட்ஸ்கோம்ப் தலைமையிலான ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி, டேனியல் ஹியூஸ் தலைமையிலான சிட்னி சிக்சர்ஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஹரிகேன்ஸ் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. நட்சத்திர வீரர்களான வில் ஜேக்ஸ், டி ஆர்சி ஷார்ட் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர். அவர்களைத் தொடர்ந்து வந்த கேப்டன் ஹேண்ட்ஸ்கோம்பும் 24 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த காலின் இங்ராம் - டிம் டேவிட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். இதன் மூலம் 20 ஓவர்களின் முடிவில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி, 8 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் 58 ரன்களையும், இங்ராம் 55 ரன்களையும் எடுத்தனர்.
இதையடுத்து வெற்றியை நோக்கி களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோஷ் பிலீப் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த எட்வர்ட்ஸ் - வின்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இதில் வின்ஸ் அரைசதம் கடந்தும் அசத்தினார்.
பின்னர் எட்வர்ட்ஸ் 47 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, அவரைத் தொடர்ந்து வின்ஸும் 67 ரன்களில் பெவிலியன் திரும்பினர். அவர்களைத் தொடந்து வந்த வீரர்களும் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டியதால், 20 ஓவர்கள் முடிவில் சிட்னி சிக்சர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன் மூலம் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணியை வீழ்த்தி, தனது புள்ளிக் கணக்கை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் டிம் டேவிட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:ரோஹித்தின் சாதனையை சமன் செய்த கோலி!