2018ஆம் ஆண்டு நடந்த யு-19 உலகக்கோப்பைத் தொடரில் வங்கதேச அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் காஸி அனிக் இஸ்லாம். இவர் தேசிய கிரிக்கெட் லீக் போட்டிகளில் பங்கேற்றபோது இவருக்கு ஊக்கமருந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் மெத்தம்பெடமைன் (Methamphetamine) என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தினை பயன்படுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து இளம் வீரர் அனிக் இஸ்லாமிடம் விசாரிக்கையில், குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்நிலையில் அவருக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் சார்பாக இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'' இளம் வீரர் அனிக் வழக்கில், அவர் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அவரின் இளமை மற்றும் அனுபவமின்மையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அவரது விளையாட்டுத் திறனை அதிகரிப்பதற்காக அவர் அந்த மருந்தினை எடுத்துக் கொள்ளவில்லை என்பதை வாரியம் உணர்கிறது. ஊக்கமருந்து பற்றி போதிய கல்வி அவருக்கு வழங்கப்படவில்லை.
அவர் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவர் கிரிக்கெட் விளையாடுவதற்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'இந்தாண்டு ஐபிஎல் கோப்பையை ஆர்.சி.பி வெல்லும்' - பிராட் ஹாக் நம்பிக்கை!