கரோனா பாதிப்பு காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் பந்துகளில் உமிழ்நீர் பயன்படுத்த ஐசிசி தடைவிதித்தது. இதனால் பந்துவீச்சாளர்கள் ஸ்விங் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் பேட்ஸ்மேன்கள்-பந்துவீச்சாளர்களுக்கு இடையே சமமான போட்டி இருக்காது எனப் பலரும் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ பேசுகையில், ''பந்துகளில் உமிழ்நீர் பயன்படுத்தத் தடை என்பது நிச்சயம் பந்துவீச்சாளர்களுக்குக் கடினம் தான். இதற்கு மாற்று ஏற்பாடாக போட்டிகளில் ஆடவுள்ள அனைத்து வீரர்களுக்கும் போட்டிக்கு முன்னதாக கரோனா பரிசோதனை எடுப்பது மட்டும்தான்.
ஆனால், உமிழ்நீர் தடையால் கூக்கபுரா பந்துகளில் பந்து வீசும்போது கடினமாக இருக்காது என நினைக்கிறேன். ஏனென்றால், கூக்கபுரா பந்தை அதிகளவில் ஸ்விங் செய்ய முடியாது. அதனால் கூக்கபுரா பந்துகளில் பந்துவீசும்போது உமிழ்நீர் தடை என்பது ஒரு பொருட்டாகவே இருக்காது.
அதேபோல் உமிழ்நீர் தடையால் நாம் அதிகளவிலான ரிவர்ஸ் ஸ்விங் வகை பந்துகளை அதிகமாகப் பார்ப்போம் என நினைக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆண்டர்சன் பந்துவீச்சில் தாக்கம் இல்லை என்ற விமர்சனம்வருகிறது.
இதற்கும் உமிழ்நீர் தடைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இங்கிலாந்து அணிக்காக அவர் களமிறங்கி வெகு நாள்கள் ஆகிவிட்டன. அதனால் ஏற்பட்ட சின்ன தடுமாற்றம்தான். அடுத்த போட்டியில் அவர் நிச்சயம் பல விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்பதில் சந்தேகம் இல்லை'' என்றார்.
இதையும் படிங்க: டெஸ்ட் தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய ஜேசன் ஹோல்டர்!