பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 , இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டபோது, டி20 அணியின் கேப்டனாக இளம் வீரர் பாபர் அஸாம் நியமிக்கப்பட்டார். இதனால் பாபர் அஸாமின் பேட்டிங் திறமையில் பாதிப்பு ஏற்படும் என விமர்சகர்களும், ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம் செய்தியாளர்களிடம் பேசுகையில், வெளிநாட்டுக்கு பயணம் செய்து விளையாடுவது எப்போதும் சவாலானது. அதிலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஆட வேண்டும் என்றால் கூடுதலாகவே சவால் இருக்கும்.
இலங்கை அணிக்கு எதிரான தொடரில் நான் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதால் எனது ஆட்டம் பாதிக்கப்பட்டது என கூறுகிறார்கள். ஆனால் இது கிரிக்கெட்டில் சாதாரண விஷயம்தான். எனது ஆட்டத்திறனில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். நிச்சயம் கேப்டன்சி ப்ரஷர் என்னை பாதிக்காது. விராட் கோலி, வில்லியம்சன் ஆகியோருக்கு கேப்டன்சி பொறுப்பு கூடுதல் சுமையாக இல்லை. அதேபோல் தான் நானும் செயல்படுவேன்.
இந்த ஆஸ்திரேலியா டி20 தொடரில் நானும், ஃபக்கர் ஸமானும் தொடக்க வீரர்களாக களமிறங்குவோம். ஃபக்கர் ஸமான் போன்ற வீரர்கள் அணிக்காக பல்வேறு முறை சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிச்சயம் அணி நிர்வாகம் வாய்ப்பளிக்கும். இந்த தொடரில் அவர் சிறப்பாக விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நவ.3ஆம் தேதி தொடங்குகிறது.
இதையும் படிங்க: கடைசி டெஸ்ட் போட்டியின் ரீகேப் புகைப்படங்கள்!