பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது.
இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் கவாஜா, ஃபின்ச், ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினால், அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 327 ரன்களை குவித்தது.
அணியில் அதிகபட்சமாக, கவாஜா 111 பந்துகளில் 10 பவுண்டரி உட்பட 98 ரன்களை அடித்தார். மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 70 ரன்களை விளாசினார்.
இதைத்தொடர்ந்து, 328 ரன் இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணியில் ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுபக்கம் நேர்த்தியான பேட்டிங்கை வெளிபடுத்திய ஹரிஸ் சோஹைல் 130 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், பாகிஸ்தான் அணி 40.2 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 239 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இதன்பின்னர் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 58 பந்துகளில் 99 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேப்டன் இமாத் வசிம் கடுமையாக போராடி அரைசதம் விளாசியும் அணியை வெற்றிபெற வைக்க முடியமால் போனது. இறுதியில் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 307 ரன்களை எடுத்தது.
இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது மட்டுமின்றி ஐந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரை 5-0 என்ற கணக்கில் வென்றது.
உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நெருங்கும் நிலையில், அந்த அணி கடைசியாக ஆடிய எட்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் வெற்றிபெற்று, உலக சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளது. ஆட்ட நாயகன் விருதை ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெலும், தொடர் நாயகன் விருதை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் -யும் வென்றனர்.