ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி மார்னஸ் லபுஸ்சாக்னேவின் இரட்டை சதத்தால் முதல் இன்னிங்ஸில் 454 ரன்களைக் குவித்தது.
லபுஸ்சாக்னே 19 பவுண்டரிகள், ஒரு சிக்சர் உட்பட 215 ரன்களில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி தரப்பில் டி கிராண்ட்ஹோம், வாகனர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிவரும் நியூசிலாந்து அணியில் கேப்டன் டாம் லாதம், டாம் பிளண்டல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை கடைபிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
29 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி நியூசிலாந்து அணி 63 ரன்கள் எடுத்தபோது இப்போட்டியின் இரண்டாம் நாள் முடிவுக்கு வந்தது. டாம் பிளண்டல் 34 ரன்களுடனும், டாம் லாதம் 26 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணி இந்தத் தொடரில் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது இதுவே முதல்முறையாகும். முதல் டெஸ்ட் போட்டியில் லாதம், ஜீத் ரவால் ஜோடி முதல் விக்கெட்டுக்கு அதிகபட்சமாக ஆறு ரன்கள் மட்டுமே சேர்த்தனர்.
இதனால், மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜீத் ரவாலுக்கு பதிலாக டாம் பிளண்டலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போட்டியில் பிளண்டல் - லாதம் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு அதிகபட்சமாக 32 ரன்கள் மட்டுமே சேர்த்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: இந்த வருடத்தின் 'டானாக மாறும் லபுசானே'!