இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், டிசம்பர் 17ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திரத் தொடக்க வீரர் ரோஹித் சர்மாவிற்கு, ஒருநாள் மற்றும் டி20 அணியில் ஓய்வளிக்கப்பட்டு, டெஸ்ட் அணியில் மட்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தனது குழந்தைப் பிறப்பு காரணமாக கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடுப்பு எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார். இதனால் அவரது இடத்தை யார் நிரப்புவார் என்ற கேள்வி முன்னதாக எழுந்தது.
இதற்கிடையில் பெங்களூருவிலுள்ள தேசியக் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வரும் ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மா ஆகியோர் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகவலின் அடிப்படையில், காயத்திலிருந்து மீண்டுவரும் ரோஹித் சர்மா, தற்போது முழு உடற்தகுதியைப் பெற்றுள்ளதாகவும், இருப்பினும் அவர் இன்னும் ஓரிரு வாரம்வரை ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என்றும் பிசிசிஐ அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அவர் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தான் ஆஸ்திரேலியாவிற்குச் செல்லமுடியும். அதுமட்டுமின்றி 14 நாள்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பிறகே அவர் அணியினருடன் பயிற்சி மேற்கொள்ள முடியும் என்பதால், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் பங்கேற்பது சந்தேகம் தான் என்றும் கூறப்படுகிறது.
மேலும் காயத்திலிருந்து மீண்டு வரும் இஷாந்த் சர்மாவும் தேவையான ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என்பதால், இஷாந்த் சர்மாவும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:‘ஆஸ்திரேலிய தொடரை எதிர்நோக்கியுள்ளேன்’ - சுப்மன் கில்