பந்தை சேதப்படுத்திய வழக்கில் ஓராண்டு தடையிலிருந்து வெளிவந்த டேவிட் வார்னர் ஐபிஎல்லில் கோர தாண்டவம் ஆடினார். சென்ற ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில், சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய வார்னர் ஒருசில போட்டிகள் தவிர்த்து அனைத்து போட்டிகளிலும் வெறித்தனமாக ஆடினார். 12 போட்டிகளில் விளையாடிய அவர் 692 ரன்கள் அடித்து ‘ஆரஞ்சு தொப்பி’யையும் கைப்பற்றினார். ஒரு சதம் உட்பட எட்டு அரைசதங்கள் அடித்து எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தார். வார்னரின் இந்த ஃபார்மை கண்டு நிச்சயம் ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் மகிழ்ச்சியாகியிருக்கும்.
2019ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பையிலும் தன்னுடைய ரன் வேட்டையை தொடங்கிய வார்னர், வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 166 ரன்கள் அடித்து ஒட்டுமொத்தமாக 647 ரன்கள் எடுத்திருந்தார். இந்த ஃபார்ம்மை அப்படியே இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரிலும் தொடர்வார் என அனைவரும் எண்ணினர். ஆஷஸ் தொடரில் முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 2 ரன்கள் எடுத்து பிராடிடம் வீழ்ந்தார். முதல் இன்னிங்ஸ் தானே அடுத்த இன்னிங்ஸில் ரன் அடிப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில், மீண்டும் 8 ரன்களில் அதே பிராட் பந்திலே அவுட்டாகினார்.
அந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலாவது அடிப்பாரா என்று காத்திருந்த நிலையில், மீண்டும்.....வேற என்ன அதே தான். ’அதே சட்ட அதே டெய்லர்’ என்ற காமெடி டயலாக் போல, இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் வார்னர் 3 ரன்கள் எடுத்து பிராட் வசமே தன்னுடைய விக்கெட்டை கொடுத்தார். ரசிகர்கள் நீ எப்டியும் பிராட்டதான் விக்கெட் கொடுப்ப எதுக்கு அப்டினு நினைச்சிருக்கும்போதுதான் இன்ப அதிர்ச்சி கொடுத்தாரு நம்ம வார்னர். ஆமா, அதே 3 ரன்னு அடிச்சாலும் ஆர்ச்சர்ட்ட விக்கெட்ட கொடுத்தாரு.
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆறுதலுக்கு 61 ரன்கள் அடித்தாலும், வழக்கம் போல இரண்டாவது இன்னிங்ஸில் பிராட் பந்தில் அவுட்டானார். நடந்து கொண்டிருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் நம்ம பிராட்தான் வார்னர ரன் எடுக்கவிடாம அவுட்டாக்கினார்.
அணை போட்டு தடுக்க முடியாத காட்டாற்று வெள்ளமாக இருந்த வார்னரை, பிராட் பெரிய மதிலே கட்டி தடுத்துவிட்டார். மொத்தம் எட்டு இன்னிங்ஸில் ஆறு முறை பிராடிடம் வீழ்ந்து தன்னோட சோக முகத்த காட்டியிருக்கிறார் வார்னர். இந்த பரிதாபகரமான நிலையிலிருந்து மீண்டு (ம்) வருவாரா வார்னர்?