கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக உலகின் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தற்போது ஒரு சில நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் குறைந்துள்ள காரணத்தால் மீண்டும் விளையாட்டுப் போட்டிகளை பார்வையாளர்களின்றி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை மாதம் எட்டாம் தேதி தொடங்கவுள்ளது.
இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து விலகுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் டேரன் பிராவோ, ஷிம்ரான் ஹெட்மையர் ஆகியோர் விலகுவதாக அறிவித்தனர்.
இதனையடுத்து வீரர்கள் விலகியது குறித்து அந்த அணியின் முன்னாள் கேப்டனான ராபர்ட்ஸ் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "அவர்கள் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கில் ஒரு ஒருங்கிணைந்த பங்கை கொண்டிருந்திருப்பார்கள். மேலும் ஹெட்மையர் விளையாடும் விதம், அவர் எதிர்காலத்திற்கான பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும் தேர்வு செய்திருந்தோம். ஆனால் அவர் தற்போது எடுத்துள்ள முடிவு காரணமாக இனி, வேறொருவர் விளையாடுவதை பெவிலியனிலிருந்து வேடிக்கை பார்க்கட்டும்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு தற்போதுதான், ஒருவழியாக மீண்டும் கிரிக்கெட் விளையாட்டை தொடங்குவது கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இந்த சூழலில் வீரர்கள் அணியிலிருந்து விலகுவது மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.