அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் 13ஆவது சீசனில் விளையாடவுள்ள வீரர்களுக்கான ஏலம் கொல்கத்தாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த ஏலத்திற்காக சிஎஸ்கே அணி தங்களது அணியிலிருந்து ஐந்து வீரர்களை (சாம் பில்லிங்ஸ், மோகித் ஷர்மா, டேவிட் வில்லி, துருவ் சோரே, சைத்தன்யா பிஸ்னோ) விடுவித்தது.
இந்த ஏலத்தைப் பொறுத்தவரையில் மற்ற அணிகளைவிட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யாரை தேர்வு செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்புதான் ரசிகர்களுக்கு தோன்றியது. அந்தவகையில், ரூ. 2 கோடிக்கு அடிப்படை தொகையிலிருந்த இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரணை சிஎஸ்கே அணி ரூ. 5.5 கோடிக்கு வாங்கியது.
21 வயது ஆல்ரவுண்டரான இவர் (இடதுகை பேட்ஸ்மேன் இடதுகை பவுலர்) கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக ஒன்பது போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் 95 ரன்கள், பவுலிங்கில் 10 விக்கெட் எடுத்தார். அதில், டெல்லி அணிக்கு எதிராக அவர் ஹாட்ரிக் விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தார்.
ஏற்கனவே பிராவோ, மிட்சல் சாண்ட்னர், ஜடேஜா என திறமையான ஆல்ரவுண்டர்கள் அணியில் இருக்கும் நிலையில், தற்போது சாம் கரணின் வருகை சிஎஸ்கே அணிக்கு பலம் சேர்க்கும் என நம்பப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, ரூ.2 கோடிக்கு அடிப்படை தொகை கொண்ட இந்திய அணியின் லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லாவை சிஎஸ்கே ரூ.6.75 கோடிக்கு வாங்கியது அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது. லெக் ஸ்பின்னருக்கு இத்தனை விலை கொடுத்து வாங்குவதாக சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் சாவ்லா 157 விக்கெட்டுகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறார். அதேசமயம், 2014இல் பஞ்சாப் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தனது சிறப்பான பேட்டிங்கால் ஆட்டத்தை அவர் ஃபினிஷ் செய்திருந்தார். இதனால், அவரது லெக்ஸ்பின் சிஎஸ்கேவிற்கு செட் ஆகும் எனக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, சிஎஸ்கே அணி ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜாஷ் ஹசல்வுட்டை அடிப்படை தொகை ரூ.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளரான இவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். இதுவரை மஞ்சள் நிற ஆஸ்திரேலிய ஜெர்சியில் அசத்திவந்த இவரை அடுத்த ஆண்டு ஒன்றரை மாதங்களுக்கு மீண்டும் மஞ்சள் நிற ஜெர்சியுடன் சிஎஸ்கே அணியில் காணலாம்.
சாம் கரண், பியூஷ் சாவ்லா, ஜாஷ் ஹசல்வுட் என வெளிநாட்டு வீரர்கள் இருவர், உள்நாட்டு வீரர் ஒருவர் என சிஎஸ்கே அணி தனது கையிலிருந்த 14.6 கோடியில் 14.25 கோடியை செலவழித்துள்ளது. ஒட்டுமொத்தத்தில், சிஎஸ்கே அணி இந்த ஏலத்தில் ஒரு ஆல்ரவுண்டர், ஒரு சுழற்பந்துவீச்சாளர், ஒரு வேகப்பந்துவீச்சாளர் என பவுலிங்கில் அசத்தலான காம்பினேஷையும் தேர்வுசெய்துள்ளது.
தற்போதைய சிஎஸ்கே அணி:
தோனி (கே), ரெய்னா, அம்பதி ராயுடு, டூ பிளஸிஸ், வாட்சன், பிராவோ, ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், ஜெகதீசன் நாராயண், கரண் சர்மா, கேதர் ஜாதவ், லுங்கி இங்கிடி, மிட்சல் சாண்ட்னர், மோனு சிங், முரளி விஜய், ரவீந்திர ஜடேஜா, கேக்வாத், சார்துல் தாகூர், ஆசிப், தீபக் சஹார், சாம் கரண், பியூஷ் சாவ்லா, ஜாஷ் ஹசல்வுட்
இதையும் படிங்க: ஐபிஎல் ஏலம்: ஹெட்மயருக்கு அடித்த ஜாக்பாட்! Live Update