வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஒரேயொரு டெஸ்ட் போட்டி சாட்டோகிராமில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் அணியின் ரஹ்மத் ஷா சதம் மற்றும் அஸ்கார் ஆப்கனின் 92 ரன்களின் மூலம் 342 ரன்களை சேர்த்தது. அடுத்ததாக பேட்டிங் செய்த வங்கதேச அணி வீரர்கள், இளம் கேப்டன் ரஷீத் கான், நபி ஆகியோரின் சுழலில் சிக்கித் தவித்தனர். வங்கதேச அணியில் மொமினுல் ஹக்கைத் தவிர்த்து வேறு யாரும் சோபிக்கவில்லை.
இதனால், பத்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்து, ஆப்கானிஸ்தானை விட 137 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது வங்கதேச அணி. இதனையடுத்து ஆட வந்த ஆப்கானிஸ்தான் அணி, இரண்டாவது இன்னிங்ஸில் இப்ராஹிம் ஷட்ரான், அஸ்கார் ஆப்கன் ஆகியோர் அரைசதமடித்தனர். மற்ற வீரர்கள் குறைவான ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
முடிவில், பத்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், ஆப்கானிஸ்தான் அணி 398 ரன்களை இலக்காக வங்கதேச அணிக்கு நிர்ணயித்தது. இந்த முறையும் ரஷீத் கான் சுழலில் வங்கதேச அணி வீரர்கள் வீழ்ந்தனர். அந்த அணி வீரர் ஷட்மன் இஸ்லாம் மட்டும் 41 ரன்கள் எடுத்தார். வங்கதேச அணி ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நான்காம் நாள் ஆட்டம் நிறைவுற்றது.
வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் 39 ரன்களுடனும், சௌம்யா சர்கார் பூஜ்ஜிய ரன்னிலும் களத்தில் உள்ளனர். நாளை நடக்கவிருக்கும் இறுதி நாள் ஆட்டத்தில், வங்கதேச அணி 262 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறும். ஆனால், அந்த அணியின் கைவசம் நான்கு விக்கெட்டுகளே உள்ளதால், வங்கதேச அணியின் வெற்றி வாய்ப்பு மங்கிய நிலையில் உள்ளது. இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வென்றால் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.