கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கி நடைபெற்ற நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் ஆட்டநாள் முற்றிலும் பந்துவீச்சாளர்களுக்கே சாதகமாக விளங்கியது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்த நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால், ஏழு ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் மீண்டும் ரன்குவிப்பில் திணறிவருகிறது. தொடக்க வீரர்களான மயாங்க் அகர்வால் மூன்று ரன்களிலும், பிரித்விஷா 14 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து, களமிறங்கிய கேப்டன் கோலி இந்த இன்னிங்ஸிலாவது கம்பேக் தருவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க, அவரோ 14 ரன்களில், கிராண்ட்ஹோம் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார்.
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஐந்து இன்னிங்ஸில் கோலி 47 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
கோலியைத் தொடர்ந்து வந்த ரஹானே தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு நியூசிலாந்து அணியின் மிரட்டலான பந்துவீச்சை நேர்த்தியாக எதிர் கொண்டார். 43 பந்துகளில் ஒரு பவுண்டரி உட்பட அவர் ஒன்பது ரன்கள் எடுத்த நிலையில், வாக்னரின் ஷார்ட் பிட்ச் பந்தில் இன்சைட் எட்ஜ் முறையில் போல்டானார்.
இதன்பின் இந்த இன்னிங்ஸில் அதிகபந்துகளை எதிர்கொண்ட புஜாரா போல்ட் பந்துவீச்சில் போல்டாகி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 88 பந்துகளில் அவர் இரண்டு பவுண்டரி உட்பட 24 ரன்கள் எடுத்திருந்தார். இதனிடையே, நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய உமேஷ் யாதவும் போல்டானார்.
இந்திய அணி 36 ஓவர்களில் ஆறு விக்கெட்டை இழந்து 90 ரன்கள் எடுத்துபோது இரண்டாம் ஆட்டநாள் முடிவுக்கு வந்தது. இந்திய வீரர்களான ஹனுமா விஹாரி ஐந்து ரன்களிலும், ரிஷப் பந்த் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
இன்று இரண்டாம் ஆட்டநாளில் மட்டும் 259 ரன்களுக்கு 16 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளன.
ஆடுகளம் பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைப்பதால் 97 ரன்களுடன் இரண்டாவது இன்னிங்ஸில் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, நாளைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் 200 ரன்களை குவித்தால், நிச்சயம் நியூசிலாந்தை வீழ்த்த வாய்ப்புள்ளது.
ஸ்கோர் சுருக்கம்:
- இந்தியா முதல் இன்னிங்ஸ் - 263 (விஹாரி 55, ஜேமிசன் 5-45)
- நியூசிலாந்து - 235 (டாம் லாதம் 51, முகமது ஷமி 4-81)
- இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ் - 90/6 ( புஜாரா 24, போல்ட் 3-12)
இதையும் படிங்க: ஹென்ரிச் கிளாசன் சதத்தால் ஆஸி.யை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா!