தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றதிலிருந்து அதிலிருந்து விலகியவரை, ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் அது வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் பார்ட்னர்ஷிப் குறித்து அவரது பேச்சைத்தான் நாம் அதிகம் கேட்டிருப்போம். முதல் பேட்டிங்கோ அல்லது சேஸிங்கோ ஒரு அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிவை நோக்கிச் சென்றாலும், அந்த அணியின் ரன்களை கட்டமைக்க பார்ட்னர்ஷிப் தேவை.
அது முதல் பேட்டிங்கில் பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டும் என்றாலும் சரி அல்லது அதை சேஸ் செய்ய வேண்டும் என்றாலும் சரி. நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தால் மட்டுமே வெற்றி என்பது சாத்தியமாகும். இது அனைத்து விதமான போட்டிகளுக்கும் பொருந்தும். பார்ட்னர்ஷிப் இருந்தால்தான் வெற்றிபெற முடியும் என்பது எழுதப்படாத விதி.
அப்படி ஒரு விதியைத்தான் கிரிக்கெட்டின் கடவுள் சச்சின், கிரிக்கெட்டின் பெருஞ்சுவர் ராகுல் டிராவிட் ஆகிய இருவரும் நியூசிலாந்துக்கு எதிராக 1999 நவம்பர் 8இல் எழுதினர். ஹைதராபாத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதற்கு முன்னதாக, அதே ஆண்டில் மே 26ஆம் தேதி உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கங்குலி - டிராவிட் ஜோடி இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 318 ரன்களைச் சேர்த்தது. தொடக்க வீரர் கங்குலி நான்கு ரன்களுக்கு நடையைக் கட்ட, இந்திய அணி 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இந்த இக்கட்டான நிலையில், டிராவிட் உடன் சச்சின் ஜோடி சேர்ந்தார். இருவரும் தங்களது சிறப்பான பேட்டிங்கால் நியூசிலாந்து அணியின் பவுலிங் அட்டாக்கை துவம்சம் செய்து சதம் விளாசினர். ஆரம்பத்தில் கங்குலியின் விக்கெட்டை கைப்பற்றியதால் இந்திய அணியை குறைந்த ஸ்கோரில் சுருட்டிவிடலாம் என்ற கிவிகளின் எண்ணத்தை சச்சின் - டிராவிட் இருவரும் மாற்றினர்.
இவர்கள் இருவரும் சேர்ந்து 278 பந்துகளில் 331 ரன்களை சேர்த்தனர். இதில், சச்சின் 150 பந்துகளில் 186 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ராகுல் டிராவிட் 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒருநாள் போட்டியில் டிராவிட்டின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அதேசமயம், இப்போட்டியின் கேப்டன் என்ற கூடுதல் பொறுப்போடு சிறப்பாக விளையாடிய சச்சினின் அதிக ஸ்கோரும் 11 ஆண்டுகளுக்கு இதுவாகத்தான் இருந்தது. அதன்பின் 2010இல் சச்சின் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்தார்.
இந்தப் போட்டியின் மூலம், கங்குலி - டிராவிட் ஆகியோர் இலங்கை அணிக்கு எதிரான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் படைத்த பார்ட்னர்ஷிப் சாதனையை (318 ரன்கள் ) ஏழே மாதங்களில் தகர்த்தது. ஆனால், சச்சின் - டிராவிட் ஜோடி செட் செய்த பார்ட்னர்ஷிப் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பின்னரே முறியடிக்கப்பட்டது.
இன்றளவும் ஒருநாள் போட்டியில் பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன்களைச் சேர்த்த ஜோடிகளின் வரிசையில் சச்சின் - டிராவிட் இணை மூன்றாவது இடத்தில் உள்ளது. மேற்கூறியதைப் போலவே இப்போட்டியில் இந்திய அணிக்கு சாதகமாக நல்ல பார்ட்னர்ஷிப் செட் ஆனதால் இந்திய அணி இப்போட்டியில் 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
பார்ட்னர்ஷிப் இல்லாமல் தனி ஒருவரின் பேட்டிங்கால் மட்டும் அந்த அணி வெற்றிபெறுவது அரிதிலும் அரிது. கிரிக்கெட்டின் கடவுள் என கொண்டாடப்படும் சச்சினுக்கு லெட் 90ஸ்களில் யாரேனும் ஒருவர் கம்பேனி தந்திருந்தால் இந்திய அணியும் பல போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கும். கூடவே சச்சினின் சதமும் வீணாகாமல் இருந்திருக்கும்.