கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென ஒரு சுய சரித்திரத்தை உருவாக்கி, அதிலுள்ள பக்கங்களில் எல்லாம் சாதனை மைல் கற்களை பதித்து, இரு தசாப்தங்களாக கிரிக்கெட் உலகை கட்டி ஆண்ட ஜாம்பவான் ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ சச்சின் டெண்டுல்கர்.
கிரிக்கெட் உலகில் எப்போதும் வளரும் வீரர் ஒருவரைப் பார்த்து இவருக்குள் இருக்கும் திறமையை வெளிப்படுத்தும் விதமாக சரியான வாய்ப்புகள் அமைந்தால் நிச்சயம் அவர் சிறந்த வீரராக உருவெடுப்பார் என்ற பேச்சு தொன்றுதொட்டு வழக்கத்தில் உண்டு. இந்த சொல்லாடல் என்பது கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். ஒரு கேப்டனின் முதல் கடமையே ஒரு வீரரின் திறமையை நன்கு அறிந்து, அவருக்கு சரியான இடத்தில் வாய்ப்பை வழங்கி சிறந்த வீரராக மாற்ற வைப்பதுதான்.
அப்படி 1990களின் ஆரம்பக்கட்டத்தில் நல்ல பேட்ஸ்மேனாக அறியப்பட்ட டெண்டுல்கர், ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக விளையாட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவர் பெரும்பாலும் ஐந்தாவது அல்லது ஆறாவது வரிசையில் மட்டுமே பேட் செய்துவந்தார்.
ஆனால், 1994ஆம் ஆண்டு ஆக்லாந்து ஈடன் பார்க் மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் நிகழ்ந்தது அந்த மேஜிக். அந்தப் போட்டியில் தொடக்க பேட்ஸ்மேனான நவ்ஜோத் சிங் சித்துவிற்கு காயம் ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக அஜய் ஜடேஜாவுடன், டெண்டுல்கர் களத்தில் இறங்கினார்.
முதல் வாய்ப்பிலேயே இனி வரும் காலங்களில் ஓப்பனிங்கில் நான்தான் முதல்வன் என்று கிரிக்கெட் உலகிற்கு சொல்வதுபோல் ஒரு இன்னிங்ஸ் ஆடினார்.
ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே டேனி மோரிசன், கிறிஸ் பிரிங்கில், கிறிஸ் ஹாரிஸ் என முன்னணி பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். கட் ஷாட், லாஃப்ட், ஸ்ட்ரைட் டிரைவ் என பந்தை விருந்தாக்கும் விதமாக ஷாட்டுகளை வெளுத்துக்காட்டி ரன் வேட்டையை அரங்கேற்றினார். தான் ஆடிய ஒவ்வொரு ஷாட்டுக்கும் ஏற்றவாறு மணிக்கட்டும், ஃபுட் ஒர்க்கை மிக நேர்த்தியாக கையாண்டு அப்லாஸ் அள்ளினார்.
இந்த நேர்த்தியான ஆட்டத்தை காண மைதானங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போதிலிருந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர், சர்வதேச கிரிக்கெட்டில் அதுவரை யாரும் நினைத்துக்கூட பார்க்காத பல சாதனைகளை படைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
அதிலும், ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள், இரட்டைச் சதம் என அதுவரை யாரும் செய்திராத சாதனைகளை முதல் முறையாக கடந்தவர் என்ற பெருமையையும் பெற்றார். சச்சின் டெண்டுல்கரின் சாதனைப் பட்டியலில் மிக முக்கிய இடத்தைப் பிடித்தது சர்வதேச போட்டிகளில் ‘சதத்தில் சதம்’ அடித்தது தான்.
2012ஆம் ஆண்டு இதே நாளில் ஆசிய கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதமடித்து ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பிப் பார்க்கச் செய்தார். சச்சின் சதமடிப்பது இயல்பான ஒன்றுதான், ஆனால் அன்றைய போட்டியில் அவர் அடித்த சதம் சதத்தில் சதம் ஆகும். ஆம், சர்வதேச கிரிக்கெட்டில் தனது 100ஆவது சதத்தைப் அவர் பதிவுசெய்திருந்தார்.
தொடக்கத்தில் ஆறாவது வரிசை வீரராக களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர், பிற்காலத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சர்வதேச அரங்கில் 100ஆவது சதத்தைப் பதிவு செய்த தினம் இன்று. மார்ச் 16, 2012. முன்னதாக, 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான போட்டியில்தான் சச்சின் கடைசியாக சதமடித்திருந்தார். கிட்டத்தட்ட 369 நாள்கள் டெண்டுல்கரின் சதத்திற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு, அந்த சதத்தின் மூலம் அவர்களின் ஜென்ம பசியை ஆற்றிவிட்டார்.
அதேசமயம், அப்போட்டியில் சதமடித்ததன் மூலம் அனைத்து டெஸ்ட் பிளேயிங் நேஷன் அணிகளுக்கு எதிராக சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் டெண்டுல்கர் படைத்தார் என்பதும் கூடுதல் தகவல்.
இதையும் படிங்க: IND vs ENG, மூன்றாவது டி20: பேட்டிங்கில் கவனம் செலுத்தும் இந்தியா