பொதுவாக, ஒருவருக்கு கிடைக்காதது, பின் மற்றவருக்கு கிடைப்பது இயல்புதான். ஆனால், அது எப்படி கிடைக்கிறது என்பதுதான் முக்கியம். அப்படி, டான் பிராட்மேனுக்கு கிடைக்காத ஒரு சாதனை சச்சினுக்கு வேறுவடிவில் கிடைத்தது.
கிரிக்கெட்டின் கடவுள், லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர் என பல செல்லப் பெயர்களைக் கொண்ட சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 1989 முதல் 2013 வரை கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அவரது கிரிக்கெட் வாழ்வை ரீவைண்ட் செய்துபார்த்தால் அது சாதனைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
பொதுவாக, சாதனை என்பது முதலில் படைக்கப்படும் பின், முறியடிக்கப்படும். ஆனால், சச்சினின் ஒரு சில சாதனைகளை யாராலும் முறியடிக்க இயலாதது. அப்படிச் சாதனைகளுக்கு பெயர்போன சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் சதத்தில் சதம் என்ற மைல்கள் சாதனையை எப்போது படைப்பார் என அவரை விடவும் கிரிக்கெட் உலகமே ஏங்கியது.
2011 வரை 99 சதங்கள் அடித்திருந்த சச்சின், எப்போது தனது 100ஆவது சதத்தை விளாசுவார் என்பதே கிரிக்கெட் பிரியர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. மார்ச் 12, 2011 தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தனது 99ஆவது சர்வதேச சதம் அடித்த அவர், அதன் பின் விளையாடிய ஒவ்வொரு தொடரிலும் நிச்சயம் ஒரு சதம் அடித்து அச்சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவை அனைத்தும் ஏமாற்றத்திலேயே முடிந்தது.
டான் பிராட்மேன் எப்படி பேட்டிங் சராசரியில் சதம் அடிக்கத் தவறினாரோ, அதேபோல் 100ஆவது சதமடிக்காமலேயே சச்சின் ஓய்வு பெறுவார் என்ற பேச்சுகளும் விமர்சகர்கள் இடையே அடிபட்டது.
மார்ச் 2011க்கு பிறகு சரியாக 2012 மார்ச் 16, வங்கதேச அணிக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரில் யாரும் நினைக்காத தருணத்தில், சச்சின் அமைதியாக சதம் அடித்தார். இதன்மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற மைல்கள் சாதனை படைத்த அவருக்கு, உலகமே தலைவணங்கியது.
ஜாம்பவான்களுக்கு சாதனைகள் படைப்பது எளிதாகத்தான் இருக்கும். ஆனால் யாரும் நினைத்துக்கூட பார்க்காத மைல்கள் சாதனையை படைக்க அந்த ஜாம்பவான்களுக்கும் பொதுமான காலம் தேவைப்படும். அதுபோலதான் சச்சினுக்கும் இந்த மைல்கள் சாதனை படைக்க, சரியாக 33 இன்னிங்ஸ், 370 நாள்கள் தேவைப்பட்டது. சச்சின் இச்சாதனை படைத்து இன்றோடு எட்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இதையும் படிங்க: நாத்திகர்களுக்கும் பிடித்த கடவுள் 'சச்சின் டெண்டுல்கர்!'