மும்பை: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, கிரிக்கெட்டை 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதலை அளித்துள்ளது. இந்த முடிவு இன்று (அக்.16) மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது. 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் டி20 வடிவில் விளையாடப்படும் எனவும், அதில் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் சேர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒலிம்பிக்கின் தொடக்கத்தில் ஆறு அணிகளை களமிறக்குகிறது.
2028 ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற இருக்கிறது. இதில் கிரிக்கெட், ஃபிளக் புட்பால், பேஸ்பால், லாக்ரோஸ், ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டுகளை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில், இந்த 5 விளையாட்டுகள் 2028 ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.
இந்த முடிவை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினரான நீடா அம்பானி உறுதிப்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்; "2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டது வரவேற்க்கதக்கது. இது உலக அளவில் ஒலிம்பிக்கின் மேல் கவனம் திரும்புவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். மேலும், ஒரு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக, ஒரு இந்தியராக மற்றும் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர் என்ற முறையில், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்காக வாக்களித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்" இவ்வாறு அவர் கூறினார்.
இதனையடுத்து இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் கிரேக் பார்க்லே கூறுகையில்; "ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்த்ததன் மூலம் எங்கள் நிறுவனங்களுக்கு முன்னுரிமை கிடைத்துள்ளது. மேலும், LA28 மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஆதரவிற்கும், எங்கள் அமைப்பின் மீது உலகம் முழுவதும் உள்ள எண்ணற்ற ரசிகர்களின் நம்பிக்கைக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.
1900ஆம் நடைபெற்ற ஒலிம்பிக்கில் மட்டும் கிரிக்கெட் இடம் பெற்றிருந்தது. அதன் பிறகு மீண்டும் கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் கொண்டு வர எடுக்கப்பட்ட நூற்றாண்டு கால முயற்சி ஒரு வழியாக வெற்றி பெற்றுள்ளது.
இதையும் படிங்க: IND VS PAK: சாதனையை தொடரும் இந்திய அணி.. 8வது முறையாக வீழ்ந்த பாகிஸ்தான்!