பிர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் முதல் முறையாக மகளிர் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் இன்று குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா, இந்திய அணிகள் மோதின.
டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா களமிறங்கினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் சேர்த்தன. கேப்டன் ஹர்மன்பீரித் கவுர் அரை சதம் விளாசி அசத்தினார். இளம் வீராங்கனை 33 பந்துகளில் 48 ரன்கள் அடித்து 2 ரன்னில் அரை சதத்தை தவற விட்டார்.
12 ஓவர்களில் 90 ரன்களுக்கு மேல் குவித்து நல்ல நிலையில் இருந்த இந்தியா, அதன் பிறகு தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததால் 154 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது.
ரேனுகா சிங் பந்து வீச்சில் ஆஸ்திரேலியாவில் தொடக்க வீரர்கள் உட்பட 4 பேர் வந்த வேகத்தில் பெவிலியனுக்கு நடையை கட்டினர். ஆனால் அதன் பிறகு ஆட்டத்தின் போக்கு மாறியது. கிரேஸ் ஹாரிஸ் அதிரடியாக ஆடி ஆஸ்திரேலியாவின் ரன் ரேட்டை அதிகப்படுத்த, கார்டனர் இறுதி வரை களத்தில் நின்று போராடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
அவர் 35 பந்துகளில் 52 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா ஒரு ஓவர் மிச்சம் வைத்து இலக்கை துரத்தியது. ராதா யாதவ் , மேக்னா சிங் ரன்களை வாரி வழங்கியதால் இந்தியா தோல்வியை சந்திக்க நேரிட்டது.
இதையும் படிங்க: "சென்னைக்கு வருவதே இதற்குதான்"... செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் 8 வயது சிறுமி!