கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி வருகிறது. அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கு பொதுமக்கள் படாதபாடு படும் நிலையில், அரசுக்கு எதிரான போராட்டமும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சமீக கருணாரத்னே கொழும்பில் உள்ள பெட்ரோல் பங்கில் இரண்டு நாள் காத்திருப்புக்கு பின்னர் தனது காருக்கு பெட்ரோல் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,"இரண்டு நாள் வரிசையில் நின்றதற்கு, அதிர்ஷ்டவசமாக இன்று (ஜூலை 16) பெட்ரோல் கிடைத்துள்ளது. எரிவாயு தட்டுப்பாட்டினால், என்னால் கிரிக்கெட் பயிற்சிக்கு கூட செல்ல முடிவதில்லை. இந்த ஆண்டு இலங்கையில் ஆசிய கோப்பை, லங்கா பிரீமியர் லீக் (LPL) என இரண்டு முக்கியமான தொடர்கள் நடைபெற உள்ளன.
அதற்கு தயாராக கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பயிற்சி மேற்கொள்ள வேண்டும். கிளப் போட்டிகளிலும் கலந்துகொள்ள வேண்டும். தற்போதைய எரிபொருள் தட்டுப்பாட்டினால் என்னால் பயிற்சிக்கு செல்ல முடிவதில்லை. இரண்டு நாள்களாக எங்கும் போகவில்லை. ஏனென்றால், பெட்ரோல் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்தேன்.
அதிர்ஷ்டவசமாக, இன்று பெட்ரோல் கிடைத்துள்ளது. தற்போது, 10 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ள இந்த பெட்ரோல் அதிகபட்சம் இரண்டு, மூன்று நாள்கள் வரைதான் தாக்குப்பிடிக்கும்" என்றார்.
இலங்கையில் அடுத்த மாதம் ஆசிய கோப்பை தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய பொருளாதார நிலையால், ஆசிய தொடர் இலங்கையில் நடைபெறுவது கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து சமீகா கூறுகையில்," ஆசிய தொடருக்கு நாங்கள் தயாராக உள்ளோம். இதுபோன்ற பெரிய தொடருக்கு, அதிக எரிபொருளை தர அரசு முன்வரலாம். ஆஸ்திரேலியா உடனான போட்டிகளும் சுமூகமாக நடந்தது. அதனால், ஆசிய கோப்பைக்கான ஏற்பாடுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்றார்.
நாட்டில் அமைதி மீட்பதற்கு தேவையான நடவடிக்கை குறித்தும், அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் ராஜினாமா குறித்தும் அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, அவர்,"இதுதொடர்பாக என்னால் அதிகம் பேச முடியாது. ஆனால், நடப்பது ஒன்றும் நல்லதற்கு இல்லை.
சரியான நபர்கள் ஆட்சிக்கு வந்தால், நல்லது நடக்க வாயப்புள்ளது. மக்கள் சரியானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இதன்மூலம், வெளிநாடுகளின் உதவிகளை பெற்று, நிச்சயம் விரைவில் நிலைமையை சீராக்க முடியும்" எனத் தெரிவித்தார். சர்வதேச அளவில் சமீரா கருணாரத்னே, 25 டி20 போட்டிகளிலும், 18 ஒருநாள் போட்டிகளிலும், ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடி மொத்தம் 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இலங்கையில் தற்போதைய சூழலில் கிரிக்கெட் தொடர் நடப்பது குறித்து, முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் சனத் ஜெயசூர்யா கூறுகையில்,"எந்த காரணத்திற்காகவும் கிரிக்கெட் போட்டிகள் தடைபட கூடாது. பிரச்சனைகளுக்கு நடுவிலும் டெஸ்ட் போட்டியை ரத்து செய்யாத ஆஸ்திரேலிய கேப்டனுக்கும், அந்நாட்டு தூதரகத்திற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
சமீபத்தில், ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில், டி20 தொடரை ஆஸ்திரேலியாவும் அணியும், ஒருநாள் தொடரை இலங்கை அணியும் வென்றது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் டிராவானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஹெலிபேட் கட்டினால் போதுமா? 'பள்ளிக்குழந்தைகளுக்காக சாலை வசதி ஏற்படுத்துங்கள்' - மும்பை உயர் நீதிமன்றம்!