புனே : இந்திய அணியில் மாற்றங்கள் கொண்டு வர வாய்ப்பில்லை என பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே தெரிவித்து உள்ளார்.
13வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்தேசம் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்திய அணி ஆரம்பம் முதலே அசத்தில் வருகிறது. கடந்த 8ஆம் தேதி சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை வெற்றியுடன் தொடங்கியது. தொடர்ந்து அக்டோபர் 11ஆம் தேதி நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியையும், 14ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியையும் வென்று புள்ளிப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் நீடிக்கிறது.
இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் நாளை (அக். 19) வங்காளதேசம் அணியை புனே மைதானத்தில் எதிர்கொள்கிறது. போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே, இனி வரும் ஆட்டங்களில் இந்திய அணியின் வெற்றிக் கூட்டணியில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.
இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரின் இருப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மாம்ப்ரே, அடுத்து வரும் ஆட்டங்களில் இந்திய அணியின் வெற்றிக் கூட்டணியே நீடிக்க அணி நிர்வாகம் விரும்புவதால், அஸ்வின் மற்றும் ஷமி ஆகியோர் இருப்பு என்பது கேள்விக்குறி தான் என்று கூறினார்.
பும்ராவுக்கு ஈடுகொடுத்து முகமது சிராஜ் பந்துவீசி வரும் வேளையில் கூட்டணியை உடைத்து புது அணியை உருவாக்குவது குறித்த எண்ணத்தில் அணி நிர்வாகம் இல்லை என்று கூறினார். அதேநேரம் அணியின் விருப்பம் குறித்து முகமது ஷமி உள்ளிட்டோரிடம் அணி நிர்வாகம் கலந்து பேசி முடிவு எடுக்கும் என்றும் பராஸ் மாம்ப்ரே தெரிவித்தார்.
சென்னையில் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடி ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட் மட்டும் எடுத்து இருந்தார். அதேநேரம் சொந்த மண்ணில் அதிக விக்கெட் எடுக்காதது குறித்த விமர்சனம் ரவிச்சந்திரன் அஸ்வின் மீது விழுந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவுக்கு இடம் அளிப்பதில் பல்வேறு சிக்கல்கள் நீடிப்பதாக பராஸ் மாம்ப்ரே தெரிவித்து உள்ளார். அணியில் மிடில் ஆர்டர் வரிசை சரியான அளவில் உள்ள நிலையில் சூர்யகுமார் யாதவிற்கான இடமும் கேள்விக் குறிதான் என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே தெரிவித்தார்.
இதையும் படிங்க : கபில் தேவுக்கே டஃப்.. 36 ஆண்டுகால சாதனை முறியடிப்பு! நெதர்லாந்துக்கு அடித்த லாட்டரி!