ஐதராபாத் : 2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கு ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்று உள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிரடியாக விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் அணி, இதுவரை விளையாடிய 7 ஆட்டங்களில் 4ல் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் கண்டு புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. எந்த சீசனிலும் இல்லாத அளவில் நடப்பு தொடரில் ஆப்கானிஸ்தான் அணி தனது மெச்சும் ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகளை அநாயசமாக தூக்கி வீசி உள்ளது.
அரைஇறுதி வாய்ப்பில் தொடர்ந்து நீடித்து வரும் ஆப்கானிஸ்தான் அணி தனது எஞ்சிய இரண்டு ஆட்டங்களில் இன்று (நவ. 7) ஆஸ்திரேலியாவையும், வரும் நவம்பர் 10ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவையும் எதிர்கொள்கிறது. இவ்விரண்டு அணிகளும் பலம் பொருந்தி காணப்பட்டாலும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அவர்களால் வெற்றி வாகை சூட முடியும்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றிவாகை சூடி புள்ளிப் பட்டியலில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கு தகுதி பெறும். அந்த வகையில் நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் அணி 2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை போட்டிக்கு தகுதி பெற்று உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியில் வெற்றியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் முக்கிய பங்கு உள்ளது என்றால் அது மிகையாகாது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா, ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர்கள் அணியில் இடம் பெற்று, அந்த அணியை வழிநடத்தி வருகிறார்.
கடந்த திங்கட்கிழமை (நவ. 6) மும்பையில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரை சந்தித்த ஆப்கானிஸ்தான் வீரர்கள், ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக விளையாடும் யுக்திகள் குறித்து கேட்டு அறிந்தனர். ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களான ரசீத் கான், முஜிப் உர் ரஹ்மான் ஆகியோர் முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபி 2025 கோப்பையில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Sri Lanka Vs Bangladesh: இலங்கைக்கு எதிரான லீக் போட்டியில் வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!