மகேந்திர சிங் தோனிக்கு மிகவும் பிடித்தமான எண் 7 என்று அனைவரும் அறிந்ததே. அவரின் பிறந்த நாள் 7ஆம் தேதி, அவர் பிறந்த மாதம் ஏழாம் தேதி (ஜூலை), இதனால் தான் அவரின் ஜெர்ஸ்சி எண்ணும் ஏழு. அதனால்தான் தோனி தனது திருமணத்தையும் ஏழாம் மாதத்திலேயே செய்துகொண்டார்.
தோனி - சாக்ஷி
2007 டி20 உலகக்கோப்பையை வென்றதற்குப் பிறகு, தோனிக்கும் பெரிய திருப்பமாக அமைந்தது, 2010ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோனி தலைமையில் கோப்பை வென்றதுதான். அந்தக் கோப்பையை ஏப்ரல் மாதம் கையில் ஏந்திய தோனி, இரண்டு மாதம் கழித்து தனது நீண்டநாள் தோழியான சாக்ஷியை மணமுடித்தார்.
திருமணமாகி இந்த 11 ஆண்டுகளில் சிஎஸ்கே அணி விளையாடும் பெரும்பாலான போட்டிகளில், கேமராக்களில் நாம் சாக்ஷியைக் கண்டிருப்போம். ஆடுகளத்தில் 'கூல்' கேப்டனாக வலம் வந்துகொண்டிருந்த தோனியை, அதன்பின் நாம் பல இடங்களில் 'கூல்' கணவனாகவும் பார்க்க முடிந்தது.
ஷிவா சிங் தோனி
2015 உலகக்கோப்பைக்கு தோனி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் சாக்ஷி, பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
அந்த உலகக்கோப்பையில் அரையிறுதியில் வெளியேறி, வெறுங்கையுடன் திரும்பிய தோனிக்குப் பெரும் ஆறுதலாய் வந்தவர், ஷிவா.
கேப்டன், கணவன் என்ற பொறுப்புகளில் தந்தையாகவும் பொறுப்பேற்றுக் கொண்டார், தோனி. அதன்பின், சிஎஸ்கே போட்டிகளில் அத்தனை போட்டிகளிலும் ஷிவா-தோனி-சாக்ஷி தான் மெயின் கவரேஜாக இருந்தார்கள்.
ஓய்வுக்குப் பின் தோனி
சமீபமாக, தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, தோனி - ஷிவாவின் விளையாட்டுகள், அவருடைய வளர்ப்புப் பிராணிகளுடன் நேரத்தைச் செலவிடுவது என தோனியின் ரசிகர்கள், சாக்ஷியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம்தான் தோனியைப் பார்க்கின்றனர்.
தோனியின் அனைத்து ஏற்ற இறக்கங்களிலும் உடனிருந்து பயணித்த சாக்ஷி, தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை - தனிப்பட்ட வாழ்க்கை என்பதை சமநிலைப்படுத்தியவர்களில் மிகவும் முக்கியமானவர்.
இந்திய கிரிக்கெட்டின் லவ்லி கப்பில்ஸ் "தோனி - சாக்ஷி" ஜோடிக்கு 11ஆவது திருமணநாள் வாழ்த்துகளை அவர்களின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: ’அட நம்ம வெண்பா...’ - ’சித்தி 2’ பிரீத்தி ஷர்மாவின் கிறங்கடிக்கும் புகைப்படங்கள்!