இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையாக திகழ்ந்து வருபவர் பி.வி. சிந்து. இவர், ஜகர்தாவில் நடைபெற்ற இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் தொடரின், மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் ஜப்பானின் யமாகுஷியை எதிர்கொண்டார். ஆட்டம் தொடங்கியதில் இருந்தே யமாகுஷியின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாததால் பி.வி. சிந்து 15-21, 16-21 என்ற நேர்செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால், யமாகுஷிக்கு தங்கப்பதக்கமும், சிந்துவிற்கு வெள்ளிப்பதக்கமும் கிடைத்தது.
இதன் மூலம், நடப்பு ஆண்டில் இரண்டுமுறை காலிறுதி, அரையிறுதி போட்டிகளில் தோல்விகளைக் கண்ட சிந்து, தற்போது ஒருபடி முன்னேறி இறுதிப் போட்டி வரை சென்றுள்ளார்.
இந்நிலையில் போட்டி முடிவடைந்த பிறகு தோல்விக் குறித்து பி.வி. சிந்து கூறுகையில்,"இந்த போட்டியில் நான் தவறான ஷாட்டுகளை கையாண்டு விட்டேன். இருப்பினும் இந்த தொடர் எனக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. நிச்சயம் இந்த தொடரில் விட்ட தங்கப்பதக்கத்தை அடுத்து டோக்கியோவில் நடைபெறவுள்ள ஜப்பான் ஓபனில் கைப்பற்றுவேன்" என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
ஜப்பான் ஓபன் தொடர் நாளை டோக்கியோவில் தொடங்கவுள்ளது. இதில், நாளைமறுநாள் நடைபெறவுள்ள மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், பி.வி. சிந்து சீன வீராங்கனை ஹன் யூவை சந்திக்கவுள்ளார்.