நடப்பு ஆண்டுக்கான முதல் பேட்மிண்டன் தொடரான மலேசிய மாஸ்டர்ஸ் சூப்பர் 500 தொடர் கோலாலம்பூரில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இரண்டாம் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், தென் கொரியாவின் அன் சி யங் உடன் மோதினார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய்னா 25-23, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறும் காலிறுதிச் சுற்றில் அவர் ஒலிம்பிக் சாம்பியனும் ஸ்பெயின் வீராங்கனையுமான காரோலினா மெரிடன் உடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.
இதனிடையே நடைபெற்ற மற்றொரு மகளிர் இரண்டாம் சுற்றுப் போட்டியில் உலக சாம்பியனும் இந்தியாவின் மற்றொரு நட்சத்திர வீராங்கனையான பி.வி. சிந்து ஜப்பானின் அயா ஒஹாரியை எதிர்கொண்டார். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய சிந்து 21-10, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளார்.
இதையும் படிங்க: உலக அதிசயத்தில் நடைபெற்ற அசத்தலான கால்பந்து போட்டி!