ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவின் வுஹான் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் சாய்னா நேவால், ஜப்பானின் அகானே யமாகுச்சியை (Agane Yamuguchi) எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை 13-21 என்ற கணக்கில் பறிகொடுத்த சாய்னா நேவால், இரண்டாம் செட்டை 23-21 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டை சாய்னா 16-21 என்ற கணக்கில் இழந்தார். இதன் மூலம் சாய்னா 13-21, 23-21, 16-21 என்ற செட் கணக்கில் போராடி வீழ்ந்தார்.
இதேபோல் நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில், இந்தியாவின் பி.வி.சிந்து 19-21, 9-21 என்ற நேர் செட் கணக்கில் சீன வீராங்கனை கய் யன்யானிடம் (cai Yanyan) தோல்வி அடைந்தார்.
இதனிடையே, ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்திய வீரர் சமீர் வர்மா, சீனாவின் ஷி யூகியை (Shi yuqi) சந்தித்தார். இதில், சமீர் வர்மா 10-21, 12-21 என்ற நேர் செட் கணக்கில் படுதோல்வி அடைந்தார்.
ஆசிய பேட்மிண்டன் ஓபன் தொடரில், இந்தியா 1965-ல் தான் இறுதியாக தங்கப்பதக்கம் வென்றது. இந்திய வீரர் தினேஷ் கன்னா ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். இதைத்தொடர்ந்து, 54 வருடங்களாக வேறு எந்த வீரர், வீராங்கனைகளும் இந்தத் தொடரில் ஒரு பதக்கம் கூட வெல்லவில்லை.
இதனால், இந்தத் தொடரிலாவது இந்திய நட்சத்திரங்களான பி.வி.சிந்து, சாய்னா நேவால், சமீர் வர்மா ஆகியோர் ஏதேனும் ஒரு பதக்கத்தை கைப்பற்றுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது.