சென்னை போரூர் அருகே உள்ள ஒமேகா இன்டர்நேஷனல் தனியார் பள்ளியில் இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து பெயரில் புதிதாக பேட்மிண்டன் மைதானம் அமையவுள்ளது.
அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பி.வி. சிந்து சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி கல்வெட்டினை திறந்துவைத்தார்.
இதையடுத்து, அப்பள்ளி மாணவர்களால் வரையப்பட்ட தனது ஓவியத்தையும் சிந்து பரிசாகப் பெற்றார். இவ்விழாவில் ஓ.என்.ஜி.சி. நிர்வாக இயக்குநர் விரேந்திர மகேந்திரு, ஒமேகா இன்டர்நேஷனல் பள்ளி தலைவர் ராஜேஷ் ரதோட் ஆகியோர் உடனிருந்தனர்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த பி.வி. சிந்து, தனது பெயரில் விளையாட்டு மைதானம் தொடங்குவது தனக்குப் பெருமையாக உள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசு விளையாட்டுத் துறைக்கு சிறப்பாக உதவி செய்துவருவதாகவும், அவர்கள் மேலும் உதவிகள் செய்தால் புது புது வீரர்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
அதனால் தேசத்திற்கு பெருமைசேரும் என நம்பிக்கைத் தெரிவித்தார். கடந்தாண்டு சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் பி.வி. சிந்து தங்கம் வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்வதே எனது குறிக்கோள்’ - பி.வி. சிந்து