இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையாக வலம் வருபவர் பி.வி.சிந்து. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு ரியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, இந்தியா சார்பாக பேட்மிண்டன் விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற சாதனையைப் படைத்தார்.
மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில், சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி, இந்தியா சார்பில் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
இந்நிலையில் சிந்து நேற்று (ஜூலை 5) தனது 25ஆவது பிறந்த நாளை தனது குடும்பத்தினரோடு கொண்டாடினார். இதனையடுத்து பல்வேறு துறை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை ட்விட்டர் வாயிலாக தெரிவித்தனர். அவற்றுள் சில ..,
விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது பதிவில், 'இந்தியாவின் முதல் உலக பேட்மிண்டன் சாம்பியனும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான பி.வி. சிந்துவிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். அவளுடைய நல்ல ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும், மகிழ்ச்சியையும் என்றென்றும் விரும்புகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தனது பதிவில், 'பிறந்த நாள் வாழ்த்துகள் பி.வி. சிந்து. உங்களுக்கு இது ஒரு சிறந்த நாள் மற்றும் சிறந்த ஆண்டாக அமைய வாழ்த்துகள். நீங்கள் புதிய உயரங்களுக்கு உயர்ந்து, தொடர்ந்து நம் நாட்டிற்குப் பரிசுகளைக் கொண்டு வர, என் மனமார்ந்த வாழ்த்துகள்' எனப் பதிவிட்டுள்ளார்.
சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு தனது பதிவில், 'பிறந்தநாள் வாழ்த்துகள் சாம்பியன். அந்த புத்திசாலித்தனமான புன்னகையை ஆண்டு முழுவதும் ஒளிரச் செய்யுங்கள்' என்று பதிவிட்டுள்ளது.