பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், ஆடவர் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியன் இந்தோனேஷியாவுடன் பலப்பரீட்சை நடத்தியது.
ஸ்பெயின் ஓபன் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்களான கிதாம்பி ஸ்ரீகாந்த், ஹெச்.எஸ். பிரணாய் ஆகியோர் சென்றதால் இந்திய அணி சற்று பலவீனமானது. இதைத்தொடர்ந்து, இப்போட்டியின் ஆடவர் ஒற்றைர் பிரிவில் இந்திய வீரர் சாய் பிரனீத், இந்தோனேஷியாவின் அந்தோனி கின்டிங்குடன் மோதினார்.
முதல் செட்டை 6-21 என்ற கணக்கில் இழந்த சாய் பிரனீத், காயம் காரணமாக இப்போட்டியிலிருந்து பாதியிலேயே விலகினார். இதனால், அந்தோனி கின்டிங் இப்போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது.
சாய் பிரனீத் ஏமாற்றினாலும், இளம் வீரர் லக்ஷ்யா சென் மற்றொரு ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் 21-18, 22-20 என்ற நேர் செட் கணக்கில் ஜோனதனை வீழ்த்தி இந்திய அணிக்கு நம்பிக்கை தந்தார்.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவில் எம்.ஆர். அர்ஜூன் - துருவ் கபிலா இணை முகமது ஆசான் - ஹென்ட்ரா சத்தியவான் இணையுடன் மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் அர்ஜுன் - துருவ் கபிலா இணை 10-21, 21-14, 21-23 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தது.
இதையடுத்து, ஆடவர் ஒற்றையர் பிரிவின் மூன்றாம் போட்டியில் சுபாங்கர் தே 21-17, 21-15 என்ற நேர் செட் கணக்கில் ஷேசர் ஹைரேன் ருஸ்டாவிடோவை தோற்கடித்தார். இதனால், இவ்விரு அணிகளும் தலா இரண்டு புள்ளிகளை பெற்றிருந்தன.
இதையடுத்து, கடைசி போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷ்யா சென் - சிராக் ஷெட்டி இணை 6-21, 13-21 என்ற நேர் செட் கணக்கில் மார்கஸ் கிடியான் - கெவின் சுகாமில்ஜோ இணையிடம் தோல்வியடைந்தது. இதனால், இப்போட்டியில் 2-3 என்ற புள்ளிகள் கணக்கில் போராடி தோல்வி அடைந்த இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் மட்டுமே கிடைத்தது.
இதையும் படிங்க: கோபிசந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது