பிரபல தனியார் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக இருப்பவர் ஜெயஸ்ரீ(32). சென்னை அடையாறு எல்பி ரோட்டில் உள்ள தி எம்ப்ரஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இதேபோல், டிவி சீரியலில் வில்லன் கேரக்டரில் 12க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து வருபவர் ஈஸ்வர்(34). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இவ்விருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், ஜெயஸ்ரீ சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது சொத்து ஆவணங்களை திருடி தனக்கு தெரியாமல் அவற்றை வைத்து வெளியில் லட்சக்கணக்கில் வட்டிக்கு கடன் வாங்கியதாகவும், அதுகுறித்து தான் கேட்டபோது மேலும் பணம் கேட்டு அடித்து துன்புறுத்தியதாகவும் புகாரில் ஜெயஸ்ரீ கூறியுள்ளார்.
மேலும், ஈஸ்வருக்கு பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அவரை ஈஸ்வர் திருமணம் செய்ய முயல்வதாகவும் அதற்கு ஈஸ்வரின் தாய் சந்திராவும் உடந்தையாக இருப்பதாகவும் ஜெயஸ்ரீ அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அடையாறு மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில் ஈஸ்வர் ஜெயஸ்ரீயிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததும், மேலும் அவரை அடிக்கடி அடித்து உதைப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 498 ஏ (வரதட்சணைக் கொடுமை), 420 (நம்பிக்கை மோசடி), 506 (1) உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ஈஸ்வரை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இன்று நடிகை ஜெயஸ்ரீ சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயஸ்ரீ, 'நான் அளித்த புகாரின் பேரில், எனது கணவர் ஈஸ்வர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர். எனக்கு அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் வருகிறது. எனது மகளுக்கும் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கப்பட்டது.
நடிகை ஒருவருடன் ஈஸ்வர் தகாத உறவு வைத்திருந்தார். திருமணத்திற்குப் பிறகு ஈஸ்வர் குடிப்பழக்கம், கஞ்சா போன்ற போதைப் பழக்கம் மற்றும் சூதாட்டம் ஆகியவற்றில் மூழ்கிவிட்டார்.
மேலும் தன்னை மிரட்டி பணம் மற்றும் நகையை பறித்து சூதாட்டத்தில் ஈஸ்வர் அவற்றை இழந்திருக்கிறார். என்னிடம் இருந்து பறித்த பணத்தை பெற்று தருமாறு காவல் ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறேன்' என்று கூறினார்.