சென்னை: சாகித்யா அகாதமி விருது வென்ற பிரபல எழுத்தாளர் சா.கந்தசாமி உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.
சாயாவனம் என்ற நாவல் மூலம் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமானவர் சா.கந்தசாமி. 15க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ள இவருக்கு 1998இல் விசாரணைக் கமிஷன் என்ற புதினத்துக்காக, தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. 1949ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் பிறந்த சா. கந்தசாமிக்கு, ரோகிணி என்ற மனைவியும் சரவணன், முரளிதரன் என்ற இரண்டு மகன்களும், செல்வி என்ற மகளும் உள்ளனர்.
சென்னை நந்தனத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த இவர், கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவு காரணமாக அவதியுற்று வந்தார். இதையடுத்து கடந்த 20ஆம் தேதி சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று (ஜூலை 31) காலை 7.15 மணி அளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79.
சா. கந்தசாமி வயது முதிர்வு மற்றும் உடல் உறுப்புக்கள் செயல்படாததால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடல் மருத்துவமனையிலிருந்து அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, சென்னை கண்ணம்மாபேட்டையிலுள்ள சுடுகாட்டில் இன்று மாலை தகனம் செய்யப்பட உள்ளதாக அவரது மகன் சரவணன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:
இறுதியாக சீனா புத்தகம் ஒன்றை எழுதி எழுதிக்கொண்டிருந்தார். சீன நாட்டின் வரலாறும், ஆதன் ஆளுமை தொடர்பான இந்த நூல் தற்போது எழுதி முடித்துள்ளார். அதன் சாப்ட் காப்பி தயாராகி வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில், அவர் உயிரிழந்தார். இந்த நூலை விரைவில் வெளியிட முயற்சிகள் எடுப்போம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை